வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அலெர்ட்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலை தூத்துக்குடியில் 38.7° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 20.2° செல்சியஸாகவும் பதிவாய் உள்ளது. இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு:- மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது . இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
23.09.2024 மற்றும் 24.09.2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தரைக்காற்று ஒரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 25.09.2024 மற்றும் 26.09.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.09.2024 முதல் 29.09.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களைப் பொறுத்தவரை, 23.09.2024 முதல் 27.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.