ஜம்மு காஷ்மீர் புட்காம் பகுதியில் பாதுகாப்புப் படை அதிரடி: லஷ்கர்-ஏ-தொய்பா தளபதி சுலைமான் ஷா சுட்டுக்கொலை
செய்தி முன்னோட்டம்
மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். புட்காம் மாவட்டம் யூஸ்மார்க் பகுதிக்கு உட்பட்ட கோராக் மற்றும் துத்பத்ரி வனப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிய நபர்களை படையினர் எச்சரித்தபோது, அவர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மூத்த பயங்கரவாதி சுலைமான் ஷா என்ற மூசா சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
தொடர்பு
பிர் பஞ்சால் பகுதியில் பல தாக்குதல்களில் தொடர்பு
கொல்லப்பட்ட பயங்கரவாதி மூசா, பிர் பஞ்சால் மலைத்தொடரின் இருபுறமும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி யூஸ்மார்க் மலையில் நடைபெற்ற என்கவுன்டரில் இருந்து தப்பிய இவர், மீண்டும் தேடுதல் வேட்டையின் போது பிடிபட்டுள்ளார்.
செப்டம்பர் 5 தாக்குதலில் இவரது நெருங்கிய கூட்டாளியான யாசிர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
LeT அமைப்பின் செயல்பாட்டு தளபதியாக இருந்த மூசாவின் வீழ்ச்சி, ஜம்மு காஷ்மீரில் அந்த அமைப்பின் பின்னடைவுக்கு பெரிய காரணியாக பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் மேலும் சிலர் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிரத் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.