கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிய பாஜக எம்பியின் சகோதரர் கைது
இந்த மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 126 மரங்களை வெட்டிக் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட விக்ரம் சிம்ஹா, தற்போது விசாரணைக்காக வனத்துறை காவலில் உள்ளார். கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பல கோடி மதிப்புள்ள 196 மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில், கிடைத்துள்ள ஆவண சான்றுகளின் மூலம் வனத்துறையினர் விக்ரம் சிம்ஹா மீது சந்தேகம் அடைந்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் அவரைத் தேடிய போது அவர் தலைமறைவானார். இந்நிலையில், பெங்களூரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக ஹாசன் மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
50 முதல் 60 வயதான மரங்கள் வெட்டிக் கடத்தல்
மாடுகள் மேய்ப்பதற்காக கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட, 12 ஏக்கர் அரசு நிலத்தில் இருந்த மரங்களை வெட்டி விக்ரம் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற தாசில்தார் கண்டறிந்து, வனத்துறைக்குத் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. விக்ரம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, அந்த மரங்கள் அனைத்தும் பல கோடி மதிப்புள்ள, 50 முதல் 60 வயதான மரங்கள் என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரதாப் சிம்ஹா
இம்மாதத்தின் மத்தியில் நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்திய இருவரில் ஒருவருக்கு, எம்பி பிரதாப் சிம்ஹா பாஸ் வழங்கிய நிலையில், அவர் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளானார். இருப்பினும் எம்பி பிரதாப், அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் தந்தை தனது தொகுதியைச் சார்ந்தவர் என்பதால் பாஸ் வழங்கியதாக விளக்கமளித்தார். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து, குளிர்கால கூட்டத் தொடரில் அமலியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து வரலாறு காணாத வகையில், 146 எம்பிக்கள் இரு அவையிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.