தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பணிநீக்கம் கோரி குடியரசுத் தலைவரிடம் இந்தியா கூட்டணி புகார் மனு
செய்தி முன்னோட்டம்
வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணிநீக்கம் செய்யக் கோரிக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் 10 முக்கியத் தலைவர்கள் நேரில் சந்தித்துப் புகார் மனு அளித்தனர். முன்னதாக, 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பதாகையேந்தி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து குடியரசுத் தலைவர் பவனை நோக்கிய எம்பிக்களின் பேரணியைக் காவல் துறையினர் விஜய் சௌக்கில் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து பிரியங்கா காந்தி வத்ரா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கே.சி. வேணுகோபால், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 10 பேரடங்கிய பிரதிநிதிகள் குழு மட்டும் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதிக்கப்பட்டது.
ஒப்புதல்
குடியரசுத் தலைவர் முர்முவிடம் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க ஒப்புதல்
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,"வாக்காளர் பட்டியலில் நடைபெறும் 'வாக்குத் திருட்டு' குறித்த எங்கள் குற்றச்சாட்டுகளைக் குடியரசுத் தலைவர் மறுக்கவோ அல்லது கேள்வி எழுப்பவோ இல்லை."
"நாங்கள் முன்வைத்த புகார்கள் தொடர்பான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்; அதனை விரைவில் நாங்கள் வழங்குவோம்" எனத் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசுகையில், "அரசியலமைப்பின் பாதுகாவலராகக் குடியரசுத் தலைவர் உரிய விசாரணை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்" என வலியுறுத்தினர்.
கோரிக்கைகள்
எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கைகள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும்.
நீக்கப்பட்ட 13.8 கோடி வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் பிற ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முடிவுகளுக்கு எதிராக 14 முறை தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவிட்டுள்ளதாக வெளியான செய்தியையடுத்து எதிர்க்கட்சிகளின் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.