மும்பை ஐஐடி-யில் இடஒதுக்கீடு முறைகேடு? எஸ்சி, எஸ்டி, ஓபிசி பேராசிரியர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு
செய்தி முன்னோட்டம்
மும்பை IIT-ல் தலித் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்கு எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தை சேர்ந்த பேராசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது RTI-ன் மூலமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அகில இந்திய ஓபிசி மாணவர்கள் சங்கத்தின் தலைவர் கவுட் கிரண் குமார் தாக்கல் செய்த RTI விண்ணப்பத்திற்கு மும்பை ஐஐடி அளித்துள்ள பதிலில் வெளியான விவரங்கள் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.
விவரங்கள்
412 பேராசிரியர்களில் ஒரு எஸ்டி பேராசிரியர் கூட இல்லை
மும்பை ஐஐடி-யில் உள்ள 412 பேராசிரியர்களில் எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் 5 பேர் மட்டுமே; ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் 6 பேர் மட்டுமே. எஸ்டி (ST) பழங்குடியினத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூட இப் பதவியில் இல்லை.
363 இணை (Associate) மற்றும் உதவிப் பேராசிரியர்களில் (Assistant Professors), 29 பேர் எஸ்சி பிரிவையும், 8 பேர் எஸ்டி பிரிவையும், 35 பேர் ஓபிசி பிரிவையும் சேர்ந்தவர்கள்.
கடந்த பிப்ரவரி மாதம் பெறப்பட்ட RTI தரவுகளுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதம் வரை எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் மட்டுமே கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளார் என கிரண் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சை
தலித் மாணவர் சாஹில் வாகோடே தற்கொலை சர்ச்சை
பருவத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி பிடிபட்ட 22 வயதான தலித் மாணவர் சாஹில் வாகோடே சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி நிர்வாகம் அவருக்கு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்தாலும், சாதி ரீதியான இழிசொற்களால் தனது மகன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்துத் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
"எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பேராசிரியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது அறவே இல்லாமல் இருக்கும் சூழலில், இப்பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் சந்திக்கும் சாதிப் பாகுபாட்டை இந்த உயர்கல்வி நிறுவனங்கள் எவ்வாறு புரிந்து கொண்டு தீர்வு காண முடியும்?" என கவுட் கிரண் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.