Loading...
தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 43.3% குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு: ICMR ஆய்வில் வெளியான முக்கியத் தகவல்கள்
(Representative Image/ source: TNIE)

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட 43.3% குழந்தைகளுக்கு ரத்த சோகை பாதிப்பு: ICMR ஆய்வில் வெளியான முக்கியத் தகவல்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2026
09:56 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43.3 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விகிதம் தேசிய சராசரியைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும். அதே சமயம், மாநில அரசின் சத்துணவு மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்கும் திட்டங்களின் பலனாக, 5 முதல் 9 வயதுக்குட்பட்ட பள்ளிச் சிறார்களிடம் ரத்த சோகை பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதும் இந்த ஆய்வில் உறுதியாகியுள்ளது.

முக்கிய முடிவுகள்

'சம்பதா' நுண் ஊட்டச்சத்து ஆய்வின் முக்கிய முடிவுகள்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 35 மாநிலங்களில் 183 மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் ரத்த மாதிரிகளைச் சேகரித்து SAMPADA எனும் நுண் ஊட்டச்சத்து ஆய்வை மேற்கொண்டது.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி, தமிழகத்தில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் 52.8 சதவீதம் பேருக்கு ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; இது தேசிய சராசரியான 55.9 சதவீதத்தை விடக் குறைவாகும்.

முன்னேற்றம்

பள்ளிச் சிறார்களிடம் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

பள்ளிச் சிறார்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை, தேசிய சராசரியை விடத் தமிழகம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

குறிப்பாக, 5 முதல் 9 வயது வரையிலான சிறார்களில் 22.2 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த சோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டம் மற்றும் வாரந்தோறும் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவற்றின் மூலமே இந்த நேர்மறையான மாற்றம் சாத்தியமானதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சிறப்பு நடவடிக்கைகள்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு நடவடிக்கைகள்

அதேவேளையில், 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளிடம் 43.3 சதவீத ரத்த சோகை பதிவாகியிருப்பது சுகாதாரத் துறையின் கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆரம்ப நிலையிலேயே முறையான ஊட்டச்சத்து சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் இந்தப் பாதிப்பை எளிதில் சரிசெய்ய முடியும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

இதற்குத் தீர்வு காணும் வகையில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையைக் கண்காணிக்கக் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ரத்த சோகை பாதிப்பை முற்றிலும் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ், பிரசவித்த அனைத்துத் தாய்மார்களுக்கும் இரும்புச்சத்து டானிக் மற்றும் சத்தான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT