நாடு முழுவதும் கனமழை, வெள்ளம்: கேரள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
புதன்கிழமை வரை ஆறு இந்திய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதில் மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்கள் அடங்கும். கேரளாவில் புதன்கிழமை வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு கேரள மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு மத்தியில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை வரை 5 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இதற்கிடையில், இன்று நொய்டா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் NCR பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. டெல்லி-NCRரில் இன்று முழுவதும் மிதமான மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் புதன்கிழமை வரை கனமழை முதல் மிகக் கனமழை நீடிக்கும். அதற்கு பிறகு மழை படிப்படியாக குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று மற்றொரு வலுவான பருவமழை நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, புதன்கிழமை வரை மகாராஷ்டிரா, ஹரியானா, சண்டிகர், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கும் வானிலை ஆய்வு மையம், அம்மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாநிலங்களில் இந்த வாரம் மிதமான மழை பெய்யும்
கனமழைக்கு மத்தியில் குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, கோவா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் தீவிர வானிலை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல தென் மாநிலங்களில் இந்த வாரம் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிசோரம், மணிப்பூர், திரிபுரா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். மேலும், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள புயல் சுழற்சி காரணமாக, ஒடிசாவில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒடிசாவில் பல்வேறு கடலோரப் பகுதிகளில் ஏழு முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வாரில் அபாய அளவை தாண்டிய கங்கையின் நீர்மட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இடைவிடாத மழை பெய்து வருவதால், கங்கை நதியின் நீர்மட்டம் நேற்று இரவு 293.25 மீட்டராக உயர்ந்தது. கங்கை நதியின் நீர்மட்டம் அபாய அளவான 293 மீட்டரை தாண்டி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், உத்தரகாண்ட் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கை நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், ஆற்றோர பகுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், நேற்று 206.54 மீட்டராக இருந்த டெல்லியில் உள்ள யமுனை ஆற்றின் நீர்மட்டம் 205.45 மீட்டராக குறைந்துள்ளது. ஹரித்வாரில் உள்ள கங்கை நதியின் நீர் மட்டம் உயர்வதால் உத்தரபிரதேசத்தின் சில மாவட்டங்களும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
40 உத்தரகாண்ட் கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது
இதற்கிடையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 மீட்டர் நீள கௌச்சர்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை கனமழையால் சேதமடைந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், உத்தரகாசியில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் யமுனோத்ரி நெடுஞ்சாலையில் பல இடங்களில் பாறாங்கற்கள் விழுந்துள்ளன. இதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டு, யமுனோத்ரி யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உத்தரகாசி மாவட்டத்தின் புரோலா, பர்கோட் மற்றும் துண்டா ஆகிய இடங்களில் 50 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, 50 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சுமார் 40 கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், 400க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் கனமழை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்பதால், தற்போதைக்கு யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.