உபி-யில் பெருமழை: 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்ததைத் தொடர்ந்து, மத்திய மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் கடந்த 48 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் கடந்த 72 மணி நேரத்தில் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளனர். உபி மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 63 மாவட்டங்களில் இயல்பை விட பல மடங்கு அதிக மழை பதிவாகியுள்ளது. செப்டம்பர் 25 முதல் 27 வரையிலான காலகட்டத்தில் வழக்கமான 9.4 மி.மீ மழையை விட 1,084% அதிகமாக(111.3 மி.மீ) மழை பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
கங்கை எக்ஸ்பிரஸ்வே நீரில் மூழ்கியது & பள்ளிகளுக்கு விடுமுறை
உன்னாவ் பகுதியில் உள்ள பஷீரத்கஞ்ச் சுங்கச்சாவடி அருகே புதிதாக அமைக்கப்பட்ட 594 கி.மீ நீள கங்கை எக்ஸ்பிரஸ்வே சாலையில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ உட்பட பல மாவட்டங்களில் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் நிவாரண ஆணையர் யஷோத் அவசர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.
பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் பெய்து வரும் இக் கனமழைக்கு, வங்கக்கடலில் தோன்றி ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் அருகே கரையை கடந்த 'அர்னாப்' புயல் அமைப்பே முக்கியக் காரணம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.