தமிழகத்தில் தொடர் கனமழை: 19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உட்பட 19 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி நிலவி உள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்த நிலையில், தற்போது அது ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு தாமதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 19 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் திருவண்ணாமலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள துவக்க பள்ளிகளுக்கு (5ம் வகுப்பு வரை) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.