Loading...
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 21, 2026
07:42 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு - மத்திய வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது மேலும் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கனமழை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

இதன் காரணமாக நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT