டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று இரவு முதல் தென் மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.
Twitter Post
கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தொடர்ந்து பெய்யும் என்பதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு தென்காசி மாவட்டம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து தலைமையாசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.