Page Loader
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்
வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவிற்கு சிஐடி சம்மன் அனுப்பி இருந்தது

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 13, 2024
05:38 pm

செய்தி முன்னோட்டம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு நீதிமன்றம். முன்னதாக கடந்த மார்ச் 17ம் தேதி சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தாயார் பெங்களூரு சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத்தொடர்ந்து, எடியூரப்பாவை கைது செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகும்படி எடியூரப்பாவிற்கு சிஐடி சம்மன் அனுப்பி இருந்தது. அவர் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நிலையில் தற்போது அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவும் தெரிவித்துள்ளார்.

வழக்கு விவரம்

எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவு 354 ஏ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது

எடியூரப்பா மீது குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு சட்டம் (போக்சோ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் எடியூரப்பா தனது இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, தனது 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மார்ச் 14-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது.

பதில்

எடியூரப்பா, வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று சபதம் 

81 வயதான எடியூரப்பா, தன் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ளார். எடியூரப்பா மீது குற்றம் சாட்டிய அந்த பெண் நுரையீரல் புற்றுநோயால் கடந்த மாதம் காலமானார். எனினும் ஏப்ரல் மாதம், CID அவரை தங்கள் அலுவலகத்திற்கு வரவழைத்து குரல் மாதிரியை சேகரித்தது. எடியூரப்பா நீதிமன்றத்தில் எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரிய நிலையில், இந்த வழக்குக்காக அரசு, சிறப்பு அரசு வழக்கறிஞர் அசோக் எச் நாயக்கை நியமித்துள்ளது.