டிசம்பர் 16ல் தமிழகத்திற்கு வருகிறது மற்றொரு பேரிடி; வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
இந்திய வானிலை ஆய்வு மையம், வங்கக்கடலில் டிசம்பர் 16ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது என்று அறிவித்துள்ளது. தற்சமயம் வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்துள்ளது. அது தமிழகம் வழியே கடந்து, கேரளா பகுதியை தாண்டி அரபி கடலுக்கு செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில், வலுவடைந்து மேற்கு, வடமேற்கே நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை
இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12 முதல் 20 செ.மீ மழை பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால், ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டுள்ளது. இதேபோன்று, டிசம்பர் 16, 17, 18ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.