தீபாவளிக்கு முன்பே திணறும் டெல்லி; பாகிஸ்தானில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் எகிறிய காற்று மாசுபாடு
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிக கடுமையான அளவில் சரிந்து 'மிகவும் மோசம்' மற்றும் 'கடும் ஆபத்து' பிரிவை எட்டியுள்ளது. வழக்கமாக தீபாவளிப் பண்டிகைக்கு பிறகே மாசுக் கட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையில், இம்முறை பண்டிகைக்கு முன்னரே டெல்லியின் ஒட்டுமொத்த AQI அளவு 330 முதல் 451 வரை உயர்ந்து பொதுமக்களின் சுவாசத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பஞ்சாப்பில் 4.2 மடங்கு அதிகமாக எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள்
டெல்லியின் இத்தகைய திடீர் காற்று மாசுபாட்டிற்கு இந்தியாவில் நடைபெறும் பயிர்க் கழிவுகள் எரிப்பு மட்டுமன்றி, எல்லைக்கு அப்பால் உள்ள பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளும் பிரதான காரணமாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
நாசாவின் FIRMS செயற்கைக்கோள் தரவுகளின்படி, அக்டோபர் 1 முதல் 29 வரையிலான காலத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 13,241 இடங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்பட்டது பதிவாகியுள்ளது.
அதே காலகட்டத்தில் இந்தியப் பஞ்சாப்பில் 3,158 இடங்களில் மட்டுமே கழிவுகள் எரிக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பஞ்சாப்பில் எரிக்கப்படும் நிகழ்வுகள் இந்தியப் பகுதியை விட 4.2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
புவியியல் சூழல்
வடமேற்கு பருவக் காற்று
வானிலை நிபுணர்களின் கூற்றுப்படி, தற்போது வீசி வரும் வடமேற்கு திசை காற்றானது பாகிஸ்தானின் லாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரிசி சாகுபடி பகுதிகளில் எரிக்கப்படும் புகையை நேரடியாக பஞ்சாப், ஹரியானா வழியாக டெல்லி-என்சிஆர் பிராந்தியத்திற்கு அடித்துக்கொண்டு வருகிறது.
நிலத்தால் சூழப்பட்ட டெல்லியின் புவியியல் அமைப்பால், மாசு துகள்கள் பூமிக்கு மிக அருகிலேயே தங்கி அடர்ந்த புகைப் மூட்டத்தை உருவாக்குகின்றன.
GRAP II
டெல்லியில் 'GRAP II' அவசரக் கட்டுப்பாடுகள் அமல்
காற்று மாசுபாடு மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, டெல்லி-என்சிஆர் பகுதியில் இரண்டாம் கட்டப் பாதுகாப்பான GRAP II அவசரக் கட்டுப்பாடுகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளன.
சாலைகளில் இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து தூசிகளை அகற்றுதல், 'ஆன்டி-ஸ்மோக் துப்பாக்கிகள்' மற்றும் நீர் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளித்தல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமான இடங்கள் மற்றும் தூசி உருவாகும் பகுதிகள் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எல்லைப் பகுதிகளில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத மற்றும் பழைய டீசல்/பெட்ரோல் வாகனங்களின் வருகை தீவிரமாக தடுக்கப்பட்டு வருகிறது.
பாகிஸ்தானின் பயிர்க் கழிவுகள் மட்டுமன்றி, உள்ளூர் வாகனப் புகை (19.2%) மற்றும் தொழிற்சாலை உமிழ்வுகளும் டெல்லி காற்றை நஞ்சாக்குவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.