ஆந்திராவில் அர்னாப் புயல் கரையேற துவங்கியது; மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, ஒடிசாவுக்கு ரெட் அலர்ட்
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' தீவிரப் புயல், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனம் கடற்கரை பகுதிகளுக்கு இடையே புதன்கிழமை அதிகாலை முதல் கரையைக்கடக்கத் தொடங்கியுள்ளது. புயல் கரையேறும் வேளையில் மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்திலும், இடையிடையே 150 கி.மீ வேகம் வரையிலும் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. பாபட்லா மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஏனம் பகுதிக்கு தெற்கே புயலின் மையம் கரையைக்கடந்து வருகிறது.
பாதிப்புகள்
ஆந்திரா மற்றும் ஏனமில் தொடரும் பாதிப்புகள்
காக்கிநாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றினால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தும், மின்கம்பங்கள் முறிந்தும் விழுந்துள்ளன.
விசாகப்பட்டினத்தின் பீச் ரோடு மற்றும் சீத்தம்மதாரா பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
காக்கிநாடா மற்றும் ஏனம் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து 1.5 முதல் 2.5 மீட்டர் உயரத்திற்கு ராட்சத அலைகள் எழும்பி தாழ்நிலப் பகுதிகளை மூழ்கடிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் (IMD) எச்சரித்துள்ளது.
அனகாபல்லி மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களில் 200 மி.மீ-க்கும் அதிகமாக அதிதீவிர கனமழை பதிவாகியுள்ளது.
ரெட் அலர்ட்
ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
அர்னாப் புயலின் தாக்கத்தால் ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், ராயகடா, கோராபுட், நவ்ரங்பூர் மற்றும் மத்கான்கிரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
மேலும் கலாஹண்டி, பூரி, கோர்தா உட்பட 10 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலர்ட்' மற்றும் கட்டாக், பாலாசோர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு 'யெல்லோ அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகள் அக்டோபர் 29 இரவு 8:30 மணி வரை அமலில் இருக்கும். புயலின் காரணமாக மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.