Loading...
வெலிங்டனில் புதிய வரலாறு: 13.2 ஓவரில் 199 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்தியா

வெலிங்டனில் புதிய வரலாறு: 13.2 ஓவரில் 199 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இந்தியா

எழுதியவர் Vasuki
Oct 27, 2026
08:33 pm

செய்தி முன்னோட்டம்

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், 199 ரன்கள் என்ற கடின இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 40 பந்துகள் மீதமிருக்கையிலேயே அபார வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா (38 பந்துகளில் 113 ரன்கள்) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (19 பந்துகளில் 44 ரன்கள்) ஜோடி வெளிப்படுத்திய ஆட்டம் சர்வதேச டி20 வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.

உலக சாதனை

பவர்பிளேயில் 118 ரன்கள்

போட்டியின் தொடக்கத்திலிருந்தே பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்ட அபிஷேக் - வைபவ் இணை, முதல் விக்கெட்டுக்கு வெறும் 7.1 ஓவர்களில் 133 ரன்கள் குவித்து அசுர பார்ட்னர்ஷிப் அமைத்தது.

வெறும் 2.2 ஓவர்களில் (14 பந்துகள்) 50 ரன்களையும், 5 ஓவர்களில் (30 பந்துகள்) 100 ரன்களையும் தொட்டு எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது.

பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் குவித்து, சர்வதேச டி20 வரலாற்றிலேயே பவர்பிளேயில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற ரோமானியாவின் சாதனையைத் (116 ரன்கள்) தகர்த்து இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

அத்துடன் டி20 போட்டிகளில் பவர்பிளேயில் இரண்டு முறை 100 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது.

இந்திய அணி

சர்வதேச சாதனைகளின் பட்டியல்

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சர்வதேச அணிகளில், 150-க்கும் மேற்பட்ட வெற்றி இலக்கை 15 ஓவர்களுக்குள் ஐந்து முறை எட்டிய முதல் அணி என்ற ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

அதேபோல், 200 ரன்கள் இலக்கை 5 ஓவர்கள் மீதமிருக்கையிலேயே எட்டிய உலகின் முதல் முழு உறுப்பினர் அந்தஸ்து கொண்ட நாடு என்ற வரலாற்றுச் சிறப்பையும் இந்தியா பதிவு செய்துள்ளது.

மேலும், சர்வதேச டெஸ்ட் விளையாடும் நாடுகளில் வெறும் 14 பந்துகளில் அதிவேக 50 ரன்களையும், 30 பந்துகளில் அதிவேக 100 ரன்களையும் கடந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் முந்தைய சாதனைகளையும் இந்திய அணி ஒரே போட்டியில் தூள் தூளாக்கியுள்ளது.

ADVERTISEMENT