10,000 பெண்களுக்கு இலவச கறவை மாடுகள்: தமிழக அரசு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், மாநிலத்தில் பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் ஆண்டுதோறும் 10,000 தகுதியுள்ள பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்காக, 2026-27ஆம் நிதியாண்டிற்கு ₹57 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்கப்பட்ட இந்த முக்கிய வாக்குறுதியைச் செயல்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறன் கொண்ட தரமான கலப்பினக் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
திட்டத்தின் நோக்கம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகம் பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும் தேசிய அளவில் முன்னிலையில் திகழ்கிறது".
"கிராமப்புற பெண்களின் பொருளாதாரத் தன்னிறைவை உறுதி செய்யவும், பால் கூட்டுறவு சங்கங்களை மேலும் வலுப்படுத்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது".
"இதற்காக 2026-27 நிதியாண்டில் 10,000 பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகள் வழங்க ₹57 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது".
"இதன் மூலம் குடும்பங்களின் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளும் ஊக்குவிக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்து உருவாக்கம்
நீண்ட கால வருமானம்
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பயனாளப் பெண்ணுக்கும் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 8 லிட்டர் பால் கறக்கும் ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
இத்திட்டம் மூலம் பயனாளி குடும்பங்களுக்குத் தினசரி வழக்கமான வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
மேலும், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், அடுத்த 5 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் 3 முதல் 4 கன்றுகளை ஈனும் என எதிர்பார்க்கப்படுவதால், இது கிராமப்புறக் குடும்பங்களுக்கு நிலையான சொத்து உருவாக்கத்தையும் தொடர்ச்சியான பொருளாதாரப் பலன்களையும் வழங்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.