Loading...
மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கிறார்

மதுரையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 28, 2026
07:46 am

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை முதல்வர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இதற்காக மதுரையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் இந்த நிகழ்ச்சியை துவங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - முக்கிய அம்சங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் சுமார் 4.11 லட்சம் குழந்தைகள் பிறக்கும் நிலையில், இத் திட்டத்திற்காக ஆண்டுதோறும் ரூ.755 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான தங்க மோதிரங்களை வழங்கும் டெண்டர் 'ஜீரோ வேஸ்டேஜ்' அடிப்படையில் 'ஜாய் ஆலுக்காஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

திட்டம் தொடக்கம்

மாநிலம் முழுவதும் 102 மையங்களில் தொடக்கம்

மதுரையில் முதல்வர் விஜய் காலை 11 மணிக்கு இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 102 மையங்களில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்தை ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கின்றனர்.

மேலும், மதுரையில் ரூ.10 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி மதுரையில் ஐந்தடுக்குக் காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அரசு சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 5 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, இரவில் தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

ADVERTISEMENT