பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன் சீன செயற்கைக்கோள்களின் 37 அசாதாரண நகர்வுகள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு முந்தைய நாட்களில், சீனாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் அப்பகுதியை மட்டும் குறிவைத்து 37 அசாதாரண சுற்றுப்பாதை மாற்றங்களை மேற்கொண்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான திகந்தரா நடத்திய ஆய்வில், தாக்குதல் நடந்த நாளன்றும் இரண்டு சீன செயற்கைக்கோள்கள் தங்கள் பாதையை மாற்றி பஹல்காம் பகுதியை அதிக முறை கண்காணித்தது கண்டறியப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் 1,332 சீன விண்வெளிப் பொருட்களின் இயக்கத்தை திகந்தரா நிறுவனம் ஆய்வு செய்தது.
அசாதாரண நகர்வுகள்
தாக்குதலுக்கு முன்பும் பின்பும் நடந்த அசாதாரண நகர்வுகள்
இதில் 190 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதை மாற்றங்களை செய்திருந்தாலும், 37 நகர்வுகள் வழக்கத்திற்கு மாறாக பஹல்காம் பகுதியின் மீது துல்லியமான கவனத்தைச் செலுத்தும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன.
தாக்குதலுக்கு ஆறு நாட்களுக்கு முன்பே, அதாவது ஏப்ரல் 16-ஆம் தேதி யோகன்-35 01ஏ என்ற செயற்கைக்கோள் தனது சுற்றுப்பாதையை மாற்றி பஹல்காம் மீது கடந்து செல்லும் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்தது.
மேலும், தாக்குதல் நடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 5.14 மற்றும் 5.59 மணியளவில் யோகன்-39 01பி மற்றும் 01சி ஆகிய செயற்கைக்கோள்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டன.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும் முறையே 37 மற்றும் 31 சுற்றுப்பாதை மாற்றங்கள் பதிவாகியுள்ளன.
உளவுத் தகவல்
கண்காணிப்புத் தொழில்நுட்பமும், உளவுத் தகவல்களும்
பொதுவாக இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்பை கண்காணிக்கும் யோகன் செயற்கைக்கோள்கள், இந்த மாற்றத்திற்குப் பிறகு பஹல்காம் மட்டுமின்றி ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க் மற்றும் ஜம்மு ஆகிய பகுதிகளையும் கூர்ந்து கவனிக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டன.
சிக்னல் மற்றும் மின்னணு உளவுத் தகவல்களை சேகரிக்கும் திறன் கொண்ட இந்தச் செயற்கைக்கோள்கள், பூமியிலிருந்து வெளியாகும் ரேடியோ அலைவரிசைகளை இடைமறித்து ஆய்வு செய்ய வல்லவை.
அதேபோல், ஏப்ரல் 16-ஆம் தேதி ஷிஜியன்-20 என்ற சீனச் செயற்கைக்கோள் தனது நகர்வு வேகத்தைக் குறைத்து, தென்னிந்திய துணைக்கண்டம் மற்றும் இந்தியப் பெருங்கடலைத் தொடர்ந்து கண்காணிக்கும் நிலையான இடத்திற்கு நகர்ந்ததும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராணுவப் பயன்பாடு
சீனாவின் யோகன் செயற்கைக்கோள்களின் ராணுவப் பயன்பாடு
சீன விண்வெளி முகமை தனது யோகன் மற்றும் காவோஃபென் வரிசை செயற்கைக்கோள்களை அறிவியல் ஆய்வு, பயிர் மதிப்பீடு மற்றும் பேரிடர் தடுப்பு ஆகியவற்றிற்காக பயன்படுத்துவதாகக் கூறி வருகிறது.
ஆனால், தற்போது சுற்றுப்பாதையில் உள்ள சுமார் 168 யோகன் செயற்கைக்கோள்கள் சீனாவின் விண்வெளி சார்ந்த ராணுவ உளவு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பின் முக்கிய அங்கமாகச் செயல்படுவதாக இந்திய மற்றும் மேற்கத்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
செயற்கைத் துளை ரேடார் மற்றும் அகச்சிவப்பு சென்சார்கள் பொருத்தப்பட்ட இவை, மேகமூட்டமான இரவு நேரங்களிலும் கூடத் துல்லியமான படங்களை எடுக்கக்கூடியவை.
கூட்டணி
பாகிஸ்தான் - சீனா விண்வெளி கூட்டணியும் பாதுகாப்புக் கேள்விகளும்
பஹல்காம் தாக்குதலில் சீனாவின் நேரடி தொடர்பை இந்த அறிக்கை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவோ அல்லது பயங்கரவாதிகள் தப்பிச் செல்லும் வழிகளை ஆய்வு செய்யவோ இந்த உளவுத் தகவல்கள் பாகிஸ்தானுக்கு உதவியிருக்கக்கூடும் என விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைக்கோள் நிறுவனத்திடம் பஹல்காம் புகைப்படங்களுக்கான தேவை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் விண்ணில் செலுத்திய ஆறு செயற்கைக்கோள்களில் ஐந்திற்கு சீனாவே தொழில்நுட்ப மற்றும் ஏவுதல் உதவிகளை வழங்கியுள்ளது.
சீன செயற்கைக்கோள்களின் இத்தகைய அசாதாரண நகர்வுகள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காணிப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.