Loading...
குழந்தைகள் தினத்தையொட்டி 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்

குழந்தைகள் தினத்தையொட்டி 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கும் முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2026
09:49 am

செய்தி முன்னோட்டம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 61 லட்சத்து 84,566 மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்களுக்கு இன்று (நவம்பர் 13) சிறப்பு 'கேக்' வழங்கப்படுகிறது. சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர், மடுமா நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில், முதலமைச்சர் விஜய் நேரில் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். குழந்தைகள் தினமான நவம்பர் 14-ஆம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால், ஒரு நாள் முன்னதாக இன்றே கேக் விநியோகிக்கப்படுகிறது.

வாழ்த்து அட்டை

முதல்வர் விஜய்யின் சிறப்பு வாழ்த்து அட்டையில் என்ன இருக்கிறது?

மாணவர்களுக்கு வழங்கப்படும் கேக்குடன், முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் அச்சிடப்பட்ட பிரத்யேக வாழ்த்து அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

வாழ்த்து அட்டையின் முன்புறத்தில், "ஆல் இஸ் வெல், கான்பிடண்ட்டா இருங்க; பிரியமுடன் விஜய்" என்ற ஊக்கமளிக்கும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

வாழ்த்து அட்டையின் பின்புறத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் 'கால அட்டவணை' அச்சிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 61.84 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு வழங்குவதற்காக பிரிட்டானியா, டிரீம் பேக், ITC) மற்றும் எலைட் நேச்சுரல் ஆகிய நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகையான கேக்குகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

அங்கன்வாடி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல்

பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் அதே வேளையில், மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இன்று சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் தலைவர் பாக்கியமேரி கூறுகையில், "தமிழகம் முழுவதும் உள்ள 54,483 அங்கன்வாடி மையங்களில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இதில் 50 சதவீத மையங்கள் பள்ளி வளாகங்களுக்குள்ளேயே செயல்படுகின்றன".

"பள்ளி மாணவர்கள் கேக் பெறும்போது அங்கன்வாடி குழந்தைகள் ஏக்கம் அடையக்கூடாது என்பதால் அவர்களுக்கும் கேக் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்தோம். இதையடுத்து அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சர்க்கரை பொங்கல் தயாரித்து வழங்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT