
சென்னையில் அதிகாலையில் கனமழை: 30 மாவட்டங்களில் மித மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை இடியுடன் கொட்டித் தீர்த்தது. நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவாகியது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ மழையும், அடையாறில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நுங்கம்பாக்கம், அடையாறு, ஆர்.ஏ.புரம் பகுதிகளில் 50 நிமிடங்களில் 5 செ.மீ மழை பெய்ததாகவும், இன்று காலை 9 மணி வரை மழை தொடரக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மழை
இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சென்னையில் இரவு நேரங்களில், குறிப்பாக இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலக் காற்று வேறுபாட்டால் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பகுதிகள் மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுவதால் தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பதிவாகலாம் என வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 27-ம் தேதி வரை மிதமான மழை தொடரலாம் எனவும், நாளை புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.