Page Loader
"அரசியல் ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கையை வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கிறேன்": அமித்ஷா
ஓய்வுக்குப் பிறகு மேற்கொள்ள உள்ள வாழ்க்கைத் திட்டங்களை குறித்து பேசிய அமித்ஷா

"அரசியல் ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கையை வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கிறேன்": அமித்ஷா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 11, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது அரசியல் ஓய்வுக்குப் பிறகு மேற்கொள்ள உள்ள வாழ்க்கைத் திட்டங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர், அரசியலில் இருந்து விலகிய பின் வேதங்கள், உபன்யாசங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தில் முழுமையாக நேரத்தை செலவிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மகளிரணியினர் மற்றும் கூட்டுறவுத்துறையைச் சேர்ந்த பெண்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது இதை அவர் பகிர்ந்து கொண்டார்.

ஓய்வு

"வேதங்கள், உபநிஷதங்களுடன் செலவிட திட்டம்"

"அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, என் வாழ்நாளில் மீதமுள்ள நேரத்தை வேதம், உபன்யாசம் மற்றும் இயற்கை விவசாயத்திற்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளேன்". "இன்று நம்முடைய உணவு வகைகள் ரசாயன உரங்களால் மாசடைந்து விட்டன. இது புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது. இயற்கையான முறையில் விளைந்த உணவுகளை சாப்பிட்டால், மருந்துகள் தேவையில்லை." என அமித் ஷா கூறினார்.

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தில் மகசூல் அதிகம்

தன் சொந்த பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், அதில் சாதாரண விவசாயத்தை விட 1.5 மடங்கு மகசூல் கிடைக்கின்றதெனவும் அவர் தெரிவித்தார். மேலும், இயற்கை விவசாயம் நீர்ப்பிடிப்பு பாதைகள் உருவாகும் வகையில் இயற்கையை பாதுகாக்கும் என்றும், ரசாயன உரங்கள் அந்த சமநிலையை அழிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார். அமித் ஷாவின் இந்த உரை, அவரது அரசியல் வாழ்க்கையின் பிறகான புதிய பரிமாணத்தைக் குறிக்கிறது. அவர், கட்சி தொண்டர்களிடையே பிரதமர் மோடியின் மரபை தொடர்ந்து வரும் தலைவராகக் கருதப்படுவதாலும், இந்தத் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.