
விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து பயணிகளின் குடும்பத்தினர் ஏர் இந்தியா, போயிங் மீது வழக்குத்தொடர திட்டம்?
செய்தி முன்னோட்டம்
ஏர் இந்தியா (AI 171) விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா மற்றும் போயிங்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் பயணித்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட, தரையில் இருந்த 34 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் 181 பேர் இந்தியர்கள், 52 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்திருந்தது.
இழப்பீடு
அதிக இழப்பீடு கேட்கக்கூடும் என செய்தி
ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இங்கிலாந்தைச் சேர்ந்த சட்ட நிறுவனமான கீஸ்டோன் லாவுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. இந்த வழக்குகள் அதிகரித்த இழப்பீடு கோருவது தொடர்பானதாக இருக்கலாம். அன்புக்குரியவர்களை இழந்த பல குடும்பங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக கீஸ்டோன் லா-வும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வாரம், சட்ட நிறுவனத்திற்கும், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையே உத்தியை வகுப்பதற்காக தொடர் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வாரக் கூட்டங்கள் முடிந்த பிறகு சட்ட நடவடிக்கைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். மாண்ட்ரீல் மாநாட்டின் கீழ், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், விமான நிறுவனம் செயல்படும் நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தால் உரிமை கோர அனுமதிக்கப்படுகிறார்கள்.