சீன-இந்திய போர்: 60 வருடங்களுக்கு முன் இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் எப்படி தொடங்கியது?
வரலாற்று நிகழ்வு: 1962ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, லடாக் மற்றும் மக்மஹோன் எல்லையில் ஒரே நேரத்தில் சீனத் படைகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து சீன-இந்தியப் போர் தொடங்கியது. ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவை தோற்கடித்த பிறகு சீனா போர் நிறுத்தம் செய்து போரை முடித்தது. அப்போது ஆரம்பித்த எல்லை பதட்டங்கள் இன்னும் சீன- இந்திய எல்லையில் நிலவி வருகிறது. இமயமலையில் உள்ள எல்லைப் பிரச்சனையே இந்த போருக்கான முக்கிய காரணமாகும். லடாக்-காஷ்மீரில் உள்ள அக்சாய் சின் பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியையும் சீனா தனக்குச் சொந்தமானது என்று உரிமை கோரியது. ஆனால், இந்த பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் இருப்பதாக இந்தியா வாதாடியது.
பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருந்த நல்ல உறவுகள்
அக்சாய் சின் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 5000 மீ உயரத்தில் உள்ள உப்பு அடுக்குகளின் பாலைவன பகுதியாகும். இந்த போர் இந்தியாவின் வட-கிழக்குப் பகுதியில் நடந்தது. அதாவது அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் கடல் மட்டத்திலிருந்து 7000 மீட்டருக்கும் உயரமான பல சிகரங்கள் இருக்கின்றன. அதனால், போர் பகுருதியில் கடுமையான பனியுடன் கூடிய வானிலை நிலவியது. இந்த கடும் பனியினாலேயே பல போர் வீரர்கள் உயிரிழந்தனர். சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா, சீனாவுடன் ஒரு நல்ல உறவைப் பேணி வந்தது. சீனா மற்றும் இந்தியா பல நூற்றாண்டுகளாக வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்ட நாடுகளாகும்.
சீன-இந்திய போர் நடந்ததற்கான முக்கிய காரணம்
1954இல், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பஞ்சசீல் அல்லது அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சர்வதேச அளவில் கூட இந்தியா சீனாவை ஆதரித்தது. ஆனால், திபெத்தை ஆக்கிரமிக்கப்போவதாக சீனா அறிவித்தவுடன் தான் இந்திய-சீன பிரச்சனைகள் தொடங்கின. அதன் பிறகு, திபெத் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. 1959ஆம் ஆண்டு நடந்த திபெத் எழுச்சிக்குப் பிறகு, இந்தியா தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. தலாய் லாமா ஒரு முக்கிய பௌத்த மத தலைவர் ஆவார். இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தது, வெளிப்படையாக சீனர்களுக்குப் பிடிக்கவில்லை. திபெத்தில் தனது ஆட்சியை நிலை நாட்டுவதற்கு வந்த ஒரு அச்சுறுத்தலாக இந்தியாவை சீனா பார்த்தது. இதுவும் சீன-இந்திய போர் நடந்ததற்கான முக்கிய காரணமாகும்.
திபெத்தின் எழுச்சிக்கு இந்தியா தான் என்று கூறிய சீனா
சீனாவின் மிக முக்கிய அரசியல் தலைவரான மாவோ சேதுங், திபெத்தின் லாசாவில் ஏற்பட்ட எழுச்சி இந்தியர்களால் தான் ஏற்பட்டது என்று அப்போது குற்றம்சாட்டி இருந்தார். 1960இல், சீனாவின் அதிபராக இருந்த சோ-என்லாய், அக்சாய் சின் பகுதியின் உரிமையை இந்தியா கைவிட்டால், அருணாச்சலப் பிரதேசத்தின் உரிமையை சீனா கைவிடும் என்று கூறினார். ஆனால், இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு, இதை முற்றிலும் நிராகரித்துவிட்டார். இரண்டு பகுதிகளிலும் சீனாவுக்கு நியாயமான உரிமைகள் இல்லை என்று முன்னாள் பிரதமர் நேரு கூறினார். 1962ஆம் ஆண்டு கோடைக்காலம் முழுவதும், இரு நாடுகளின் படைகளுக்கும் இடையே எல்லைப் பகுதிகளில் மோதல்கள் இருந்தன. சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளுக்குப் படைகளையும் ரோந்துப் பணிகளையும் அனுப்பத் தொடங்கிய இந்தியா, 'முன்னோக்கிய கொள்கையை' பின்பற்றத் தொடங்கியது.
இந்தியாவிற்கு உதவி செய்ய அமெரிக்கா மற்றும் ரஷ்யா மறுத்தது
இந்த படைகளில் சில இந்திய எல்லைகளைத் தாண்டியும் சென்றன. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைத்தது. மேலும், சீனா இந்தியாவை தாக்கும் என்று அப்போதைய இந்தியத் தலைமை நினைக்கவில்லை. எந்தவொரு பெரிய போருக்கும் இந்திய இராணுவம் அப்போது தயாராக இல்லை. சீனப் படைகளை விட இந்திய வீரர்களின் எண்ணிக்கை மிககுறைவாக இருந்தது. சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு படைகளை அனுப்புவதற்கு முன் இந்தியா சரியாக திட்டமிடவில்லை. மேற்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் ஒரு மாதமாக நடந்த போரில், கிட்டத்தட்ட 3000 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 1000 பேர் காயமடைந்தனர். அப்போது, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம்(சோவியத்-யூனியன்) இந்தியா உதவி கேட்டது. ஆனால் அந்த நாடுகளிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
இந்தியா தயார்நிலையில் இல்லாமல் இருந்தது தான் தோல்விக்கு காரணமா?
சீனாவும் இந்தியாவும் அந்த போரில் தங்கள் கடற்படை மற்றும் விமானப் படையைப் பயன்படுத்தவில்லை. நவம்பர்-21ஆம் தேதி, உரிமைகோரிய பகுதிகளை கைப்பற்றியவுடன் போர்நிறுத்தத்தை சீனா அறிவித்தது. அந்த போருக்குப் பிறகு, திபெத்திய அகதிகள் மற்றும் புரட்சியாளர்களுக்கு இந்தியா தனது ஆதரவை அதிகரித்தது. இந்த போரில் தோல்வி அடைந்ததற்கு இந்தியா தயார்நிலையில் இல்லாமல் இருந்தது தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. அதனால், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் வி.கே.கிருஷ்ண-மேனன் பதவி விலகினார். இந்த தோல்விக்கு பிறகு, இந்தியா தனது ஆயுதப் படைகளை நவீனமயமாக்க தொடங்கியது. அதனால், பிற்கால மோதல்களில் இந்தியா மிகவும் தயாராக இருந்தது. தேசிய பாதுகாப்பு விஷயங்களில் கூடுதல் விழிப்புடனும் இருக்கவேண்டும் என்பதை இந்திய அரசியல் தலைவர்களுக்கு உணர்த்திய ஒரு போர் இது என்றே கூறலாம்.
இந்த காலவரிசையைப் பகிரவும்