தமன்னா பாட்டியா பிறந்தநாள்- கோலிவுட்டில் அவரின் சிறந்த 5 படங்கள்
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சீரான இடைவெளிகளில் வெளிவரும் அவரது படங்களில், அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி, தன்னை தமன்னா பலமுறை நிரூபித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு தனது பள்ளிப் பருவத்தில், சாந்த் சா ரோஷன் செஹ்ரா திரைப்படத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய தமன்னாவிற்கு இன்றளவும் வெற்றி தான். அவரது பிறந்த நாளில், தமிழில் அவரின் சிறந்த ஐந்து படங்கள் இதோ.
கல்லூரி
2006ம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அதற்கு அடுத்த ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம் தமிழில் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தியது. தனது அப்பாவித்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த தமன்னாவிற்கு, இப்படத்திற்கு பின் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. சிவகங்கையில் நடக்கும் கதையில், தென் மாவட்டத்து பெண்ணாக தமன்னா அச்சாசலாக பொருந்தினார். அவரது நடிப்பு அவர் எந்த கதாபாத்திரத்திலும் ஜொலிப்பார் என்பதற்கு உதாரணம்.
பையா
கல்லூரி படம் மூலம் கவனிக்கபட்ட தமன்னா, பையா திரைப்படத்தின் மூலம் தமிழில் உச்சத்தை அடைந்தார். கார்த்தியின் இரண்டாவது படமாக இதை லிங்குசாமி இயக்கி இருந்தார். சிவாவும், சாருலதாவும் மும்பைக்கு மேற்கொள்ளும் அசாதாரண பயணமே படத்தின் கதை. படத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது. படம், அதன் பாடல்கள் மற்றும் கதைக்காக மாபெரும் வெற்றி வெற்றியடைந்ததால், தமன்னாவிற்கு தனது அடுத்தடுத்த படங்களில் விஜய் மற்றும் தனுசு உடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது.
பாகுபலி- 1
தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்ட பாகுபலி 1 திரைப்படத்தின் மூலம், தன்னால் காதல் கதாபாத்திரங்களை தாண்டி தீவிரமான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என அவர் ரசிகர்களுக்கு உணர்த்தினார். பிரபாஸ் மற்றும் தமன்னாவுக்கு இடையே, விசில் அடிக்க வைக்கும் கெமிஸ்ட்ரி, இதயங்களை திருடியது, இதுவே படத்தின் முக்கிய சிறப்பம்சமாகவும் அமைந்தது. இப்படத்தில் அவந்திகா கதாபாத்திரத்தில், போர் வீராங்கனையாக தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தர்மதுரை
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் தமன்னா இணைந்த படம் தர்மதுரை. குடும்பச் சிக்கல்களை நுணுக்கமான பயணத்தை படம் விவரித்தது. தமன்னா சமூகத்திற்கு இலவசமாக சேவை செய்ய விரும்பும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் இது இவரின் திறமைக்கு உணர்ச்சிகரமான பாத்திரமாக அமைந்தது. பல்வேறு தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், தமிழில் தமன்னாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக முதன்மையான காரணமாக அமைந்தது.
தேவி
கமர்சியல் மற்றும் ரொமாண்டிக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தமன்னா, ஏ எல் விஜய் இயக்கிய தேவி படத்தின் மூலம் திகில் கதாபாத்திரத்திலும் நடித்தார். பகலில் அமைதியான மனைவியாகவும், இரவில் மாடனான பேயாக மாறி பிரபுதேவாவை அச்சுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து தமன்னா அசத்தினார். நடிப்பு மட்டுமல்லாது, தன்னால் நடமாடவும் முடியும் என ரசிகர்களுக்கு தமன்னா இப்படம் மூலம் காட்டினார். படம் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவானது.