பாயல் கபாடியா முதல் கிரண் ராவ் வரை: இந்திய சினிமாவின் சாதனை இயக்குனர்கள்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
பெண்களின் மகத்துவத்தை போற்றும் இந்த முக்கியமான நாளில் ஆண்களுக்கு நிகராகவும், அவர்களை விட அதிகமாகவும் சாதித்து காட்டிய பல பெண்களின் சாதனைகளை பட்டியலிடுவது வழக்கம்.
அந்த வகையில் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த சினிமா துறையில், குறிப்பாக திரைக்கு பின்னால் கடந்த சில காலம் வரை, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பெண்களே முத்திரை பதித்தனர்.
பண்டைய நடிகைகளான பானுமதி, சாவித்திரி, ரேவதி என ஒரு சிலரே இயக்குனர்களாக முடிந்தது.
எனினும் அவர்கள் வகுத்த பாதையில் பயணித்த இக்கால பெண்கள் சிகரங்களை தொட்டுள்ளனர்.
அப்படி இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்து சென்ற பெண் இயக்குனர்களை பற்றி ஒரு பார்வை!
பாயல் கபாடியா
All We Imagine as Light இயக்குனர் பாயல் கபாடியா
பாயல் கபாடியா ஒரு இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார்.
2017 ஆம் ஆண்டில், அவரது குறும்படம் ஆஃப்டர்நூன் கிளவுட்ஸ் 70வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியத் திரைப்படமாகும்.
2021ஆம் ஆண்டில், அவரது முதல் திரைப்படமான A Night of Knowing Nothing' படத்திற்காக 74வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படத்திற்கான கோல்டன் ஐ விருதை வென்றார்.
அதனைத்தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில், அவரது புனைகதை திரைப்படமான 'All We Imagine as Light' படத்திற்காக 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்.
இது சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரையையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.
சுதா கொங்கரா
தேசிய விருதை தட்டி சென்ற சுதா கொங்கரா
சுதா கொங்கரா கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முத்திரை பதித்து வரும் இயக்குனர்.
நேர்த்தியான திரைக்கதை, விறுவிறுப்பான இயக்கம் என சுதாவின் படங்கள் அனைத்துமே அழுத்தமானவை.
இவரது முதல் படம் 'துரோகி'. அடுத்ததாக மாதவனுடன் இவர் இயக்கிய 'இறுதி சுற்று' திரைப்படம் தேசிய விருதை வென்றது.
அதோடு, படத்தை அவர் ஹிந்தியிலும் வெளியிட அவர் பாலிவுட்டிலும் ஹிட் இயக்குனராக மாறினார்.
பின்னர் இப்படம் தெலுங்கிலும் ரிமேக் செய்து வெற்றி கண்டார்.
மூன்று மொழிகளிலும் பல்வேறு விருதுகளை குவித்தது இப்படம்.
அடுத்தாக வாழ்க்கை வரலாற்று படமான 'சூரரை போற்று' படத்தை இயக்கி தேசிய விருதை வென்றார். இப்படம் ஹிந்தியிலும் எடுத்தார் சுதா.
தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'பராசக்தி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அஞ்சலி மேனன்
பெங்களூரு டேய்ஸ் இயக்குனர் அஞ்சலி மேனன்
பெரும்பான்மையாக மலையாள படங்களை மட்டுமே எடுத்துள்ள அஞ்சலி மேனன், அப்படங்களில் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் என்றே கூற வேண்டும்.
அவரின் இயக்கத்தில் வெளியான பெங்களூர் டேய்ஸ், உஸ்தாத் ஹோட்டல் உள்ளிட்ட படங்கள் அதற்கு சான்றாகும்.
இப்படங்கள் மாநில விருதுகள் மட்டுமின்றி, தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதுகள் என எண்ணற்ற விருதுகளை வென்றது.
இவரது பாணி வித்தியாசமான கதைக்களத்தில் எளிமையான மனிதர்களும் அவர்களின் உணர்வுகளை பற்றியும் பேசும் படம்.
பெரும்பாலும் குடும்பம் சார்ந்த படமாகவே இருக்கும் அஞ்சலியின் படங்கள்.
மலையாள சினிமாவின் பிரபலமான Women in Cinema Collective (WCC)-இன் நிறுவனர்களில் ஒருவர் அஞ்சலி மேனன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரண் ராவ்
லாபட்டா லேடீஸ் இயக்குனர் கிரண் ராவ்
2024 ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களில் லாபட்டா லேடீஸ்-உம் ஒன்று.
இப்படத்தின் இயக்குனர் கிரண் ராவ், பிரபல நடிகர் அமீர் கானின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இதற்கு முன்னர் இயக்கிய டோபி காட் படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.
அவரது இரண்டாவது படமே ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சினிமாவை பிரதிநிதித்துவம் செய்தது அவரது சிறந்த இயக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
எனினும், இப்படம் ஆஸ்கார் இறுதி பட்டியலில் இடம் பெறாதது சற்று ஏமாற்றமே!
இயக்குவதை தாண்டி இவர் படங்களையும் தயாரித்துள்ளார்.
நந்தினி ரெட்டி
தெலுங்கு சினிமாவை புரட்டி போட்ட இயக்குனர் நந்தினி
பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே காமெடி கலந்த படங்கள் எடுக்க வரும் என்ற வரலாற்றை மாற்றியவர் நந்தினி.
இவரது படங்களில் மெல்லிய காதல் மற்றும் உணர்வுகள் இழையோடும்.
ஆனால் இவை அனைத்துமே காமெடி கலந்த ஜனரஞ்சகமான கதை சொல்லலை கொண்டிருக்கும்.
ஆலா மோதலைந்தி, ஓ பேபி உள்ளிட்ட படங்களை இயக்கிவர் நந்தினி.
இப்படங்கள் மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் வெற்றிக்கண்டன.
கீது மோகன்தாஸ்
தேசிய விருது வென்ற முன்னாள் நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ்
குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர் கீது மோகன்தாஸ்.
80களில் வெளியான 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் இவர்.
பின்னர் 'நளதமயந்தி' படம் மூலமாக ஹீரோயினாக தமிழில் ஒரு படத்தில் நடித்தார்.
அவர், திரைப்பட இயக்கத்தை கையில் எடுத்ததும் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.
அவரின் முதல் இயக்கம் ஒரு குறும்படம்-'கேள்குனுண்டோ', கேரளா அரசின் பள்ளிப்பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனையடுத்து அவர் இயக்கிய லையர்ஸ் டைஸ்(Liar's Dice) என்ற திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது.
இரண்டாவது திரைப்படமான மூத்தோன், சர்வேதேச அங்கீகாரங்களை வென்றது.
தற்போது அவர் இயக்கி வரும் 'டாக்ஸிக்' என்ற கன்னட மொழி படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
ஸோயா அக்தர்
பாலிவுட்டை திரும்பி பார்க்கவைக்கும் ஸோயா
பிரபல பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர்- நடிகை ஹனி இரானியின் மூத்த மகளாவார்.
இவரின் குடும்பத்தினர் அனைவருமே திரைத்துறையில் இருந்ததாலோ என்னமோ, ஸோயாவிற்கு இயல்பிலேயே திரைத்துறையின் மீது ஆர்வம் பிறந்தது.
அவருடைய படங்கள் அனைத்துமே தனித்துவமான கதையம்சத்திற்காக பாராட்டுகளை பெற்றது.
முன்னணி நட்சத்திரங்கள் ஹீரோயிசம் இன்றி இயல்பாக கதையை நகர்த்தி செல்லும் விதத்தில் அவரின் படங்கள் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது.
அவரது இயக்கத்தில் வெளியான கல்லி பாய்(Gully Boy) என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது வரை 8 படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ச்சியாக ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற முதல் பெண் இயக்குனர் என்ற அங்கீகாரத்தையும் அவர் பெற்றுள்ளார்.
லீனா மணிமேகலை
பன்னாட்டு கவனம் ஈர்த்த தமிழ் திரைப்பட இயக்குனர் லீனா
பல குறும்படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த லீனா மணிமேகலை ஒரு தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர் போன்ற பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.
இவரது குறும்படங்களும், கவிதைகளும் பெரும்பாலும் பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள் போன்றவற்றை கருப்பொருள்களாக கொண்டிருக்கும்.
இவர் இயக்கிய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் பன்னாட்டு கவனம் பெற்றிருக்கின்றன.
பன்னாட்டு திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
முன்னோடிகள்
இந்திய சினிமாவில் இவர்களுக்கு முன்னரே சாதித்த சில முன்னோடிகள்
இவர்களை போலவே தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பெண் இயக்குனர்களும் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
இந்திய சினிமாவில் இவர்களுக்கு முன்னரே இயக்கத்தில் சாதித்து காட்டிய முன்னோடிகள் உள்ளனர்.
அவர்கள் பயணப்பட்ட பாதையிலேயே தற்கால சமூகம் சாதித்து கொண்டிருக்கிறது எனபதில் ஐயமில்லை.
'அஷ்டாவதானி' என குறிப்பிடப்படும் பழம்பெரும் நடிகை பானுமதி, நடிகையர் திலகம் சாவித்ரி, ரேவதி, ஸ்ரீப்ரியா, சுஹாசினி, ரோஹிணி போன்ற நடிகைகள் நடிப்பில் சாதித்தது மட்டுமின்றி இயக்கத்திலும் சாதித்து காட்டியுள்ளனர்.
பாலிவுட்டிலும் கொன்கனா சென், மேக்னா குல்சார், ஃபாராகான் போன்றவர்கள் பல வெற்றி படங்களை இயக்கி உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்தவர்கள்.
பல தடைகளை தாண்டி சாதித்து கொண்டிருக்கும் இந்த பெண்டிரை போற்றுவோம்!