படப்பிடிப்பின் போது தன்னுடன் செல்பி எடுத்த சிறுவனை தாக்கிய நானா படேகர்
#மீடூ சர்ச்சையில் சிக்கிய சில ஆண்டுகளுக்கு பின்னர், பாலிவுட் நடிகர் நானா படேகர் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற சிறுவனை, நானா படேகர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நானா படேகர் செயலுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில், வாரணாசியில் நடைபெற்றுவரும்ஜெர்னி(Journey) படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நானா படேகர் பின்புறம் வந்து, ஒரு சிறுவன் செல்ஃபி எடுக்க முயல்கிறான். அவன் செய்யும் செயலை உணர்ந்த நானா படேகர் அவன் தலையில் பலமாக தாக்குகிறார். பின்னர் அருகில் இருந்த படக்குழுவை சேர்ந்த ஒருவர், அந்த சிறுவனின் கழுத்தைப் பிடித்து படத்தளத்தில் இருந்து வெளியேற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
செல்பி எடுக்க முயன்ற சிறுவனைத் தாக்கும் நானா படேகர்
செல்பிக்கு எதிரான தமிழ் சினிமா ஜாம்பவான்கள்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் சூர்யாவின் தந்தைமான சிவக்குமார், இரண்டு முறை, தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவர்களை தடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு, மதுரையில் நடந்த கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த சிவகுமார், தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் கைபேசியை தட்டிவிட்டார். அந்த கைபேசி கீழே விழுந்து உடைந்த நிலையில், அவரின் இச்செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்ட சிவகுமார், அந்த ரசிகருக்கு புதிய கைப்பேசியை வழங்கினார். இதே போல், 2019 ஆம் ஆண்டும் செல்பி எடுக்க முயன்றவரின் கைபேசியை தட்டிவிட்டார். இசையமைப்பாளர் மேஸ்ட்ரோ இளையராஜாவும் செல்ஃபிக்கு எதிரானவர் தான். அவரும் சில சமயங்களில் செல்பி எடுக்க முயன்றவர்களை தடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்ஃபிக்கு எதிரான பிரபலங்களின் அணுகுமுறை
மற்றொரு முறை, நடிகர் அஜித் தேர்தல் நேரத்தில் ஓட்டுப்போட, தனது மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்றுகொண்டிருந்த போது, ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயல, அவர் அந்த ரசிகரின் கையை வேகமாக தட்டி விட்டார். பிரபலங்களில், ஒரு சிலர் செல்ஃபிக்கு எதிராக இது போன்ற செயலில் ஈடுபடுவது குறித்து கேட்கப்பட்ட போது, அவர்கள் கூறியது, "நாங்கள் ரசிகர்களை மதிக்கிறோம். ஆனால், உரிய அனுமதி இன்றி எங்களை படம் பிடிப்பது எங்களுக்கும் தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. செல்ஃபி எடுக்க சந்தர்ப்பமும் சூழலையும் ரசிகர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி, முன்னறிவிப்பின்றி செல்ஃபிக்கள் எடுப்பது எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தில் அத்துமீறி நுழைவது போன்றது" எனக்கூறுகின்றனர்.