கிரிக்கெட்டில் தோற்றதால் அழுதுவிட்டேன்- செல்வராகவன் ட்விட்
ஆஸ்திரேலியா உடனான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், தான் அழுதுகொண்டே இருந்ததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். 13வது ஒருநாள் உலகக் கோப்பை தொடர், இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வந்தது. உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா, டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான சதத்தால், ஆறாவது முறையாக மீண்டும் உலக கோப்பையை கைப்பற்றியது.
"நெஞ்சம் உடைந்து சிதறியது"- செல்வராகவன்
உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி, கோடிக்கணக்கான இந்தியர்களின் உலகக் கோப்பை கனவை தகர்த்து அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அது செல்வராகவனையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவின் உலகக் கோப்பை தோல்வி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவன், "நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு, அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை." "தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை.பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது" என பதிவிட்டு இருந்தார்.