அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு: தனித்தனியாக வந்த முதல்வர் விஜய் - சங்கீதா
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்ற நிலையில், சென்னையில் நடந்த வரவேற்பில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் தனித்தனியே பங்கேற்று மணமக்களை வாழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்ததும், பின்னர் 2026 ஆகஸ்ட் மாதம் அந்த மனுவை வாபஸ் பெற்றதும் பெரும் பேசுபொருளான நிலையில், இருவரும் தனித்தனியாக விழாவில் கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது.
திரைப் பிரபலங்கள்
அரசியல் தலைவர்கள் நேரில் வாழ்த்து!
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி மாறன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் இந்திய அரசியல், சினிமா, தொழில்துறை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜய், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் நேரில் வந்து வாழ்த்தினர். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணித் திரையுலக நட்சத்திரங்களும் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
வாழ்த்து
கடிதம் மூலம் பிரதமர் வாழ்த்து
வரவேற்பு விழாவில் நேரில் பங்கேற்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கடிதம் வாயிலாக மணமக்களுக்குத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறன் ஆகியோருக்குத் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி மற்றும் சோனியா காந்தி, அனிருத் - காவ்யா தம்பதியர் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையோடும், அன்போடும், மகிழ்ச்சியோடும் இணைந்து வாழ வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.