சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, சல்மான் கானின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் (AICWA) வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கும் இது குறித்து பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. நேற்று ஏப்ரல் 14-ஆம் தேதி அதிகாலை சல்மான் கான் வீட்டில் மர்ம நபர்கள் இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதுவரை யாரும் இந்த சம்பவத்தில் கைது செய்யப்படவில்லை.
என்ன நடந்தது?
நேற்று ஏப்ரல்-14, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள சல்மான் கானின் வீடு அமைந்துள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அதிகாலை 4:51 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், துப்பாக்கிச்சூடு நடந்தபோது சல்மான் கான் வீட்டில் இருந்தார். இந்த சம்பவத்திற்கு பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைதள பதிவில் பொறுப்பேற்றுள்ளார். அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அங்கிருந்து அவர் இந்த சம்பவத்திற்கு திட்டம் வகுத்து தந்ததாக அவருடைய பெயரில் உள்ள ஒரு ஃபேஸ்புக் பக்கம் கூறுகிறது.