NVIDIA சிஇஓ ஜென்சன் ஹுவாங் ராஜினாமா: இடைக்கால CEO-வாக கோலெட் கிரெஸ் நியமனம்
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி ஏ.ஐ (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் நீண்டகால தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜென்சன் ஹுவாங் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக துணைத் தலைவரும் தலைமை நிதி அதிகாரியுமான கோலெட் கிரெஸ், நிரந்தர வாரிசு தேர்ந்தெடுக்கப்படும் வரை என்விடியாவின் இடைக்கால CEO-வாக பொறுப்பேற்பார் என நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பின்னணி
ஜென்சன் ஹுவாங் ராஜினாமாவுக்கான பின்னணி என்ன?
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிறுவன விதிகளை மீறிய சர்ச்சைகளால் ஜென்சன் ஹுவாங்கின் தலைமைப் பதவி கடுமையான நெருக்கடிக்கு உள்ளானதே இந்தத் திடீர் வெளியேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
சீன தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் மற்றும் என்விடியாவின் சுகாதாரத் துறை துணைத் தலைவர் கிம்பர்லி பவல் உள்ளிட்ட பெண்களுடன் ஜென்சன் ஹுவாங்கிற்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்புகள் குறித்த செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் பூதாகரமானதை தொடர்ந்து, இந்த வாரத் தொடக்கத்தில் என்விடியா ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய ஹுவாங், தனது மனைவிக்கு துரோகம் இழைத்ததை ஒப்புக்கொண்டதுடன், தனது குடும்பத்தினரிடமும் சக ஊழியர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தார்.
மாற்றங்கள்
நிர்வாகக் குழுவில் முக்கிய மாற்றங்கள்
ஜென்சன் ஹுவாங்கின் வெளியேற்றத்தை தொடர்ந்து என்விடியா நிர்வாக குழுவில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2013 செப்டம்பர் முதல் என்விடியாவின் நிதிப் பிரிவை வழிநடத்தி வரும் கோலெட் கிரெஸ், சிஸ்கோ மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் இடைக்கால சிஇஓ பொறுப்புடன், CFO பதவியையும் தொடர்ந்து கவனிப்பார்.
என்விடியா வரலாற்றில் முதல் முறையாக இயக்குநர் குழுவின் தலைவராக ஹார்வி சி. ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சினாப்சிஸ் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக தலைவராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.
தாக்கம்
உலக AI சந்தை & அமெரிக்கக் கொள்கைகளில் ஏற்படப்போகும் தாக்கம்
என்விடியாவின் இணை நிறுவனரான ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தில் சுமார் 3.61% பங்குகளுடன் நான்காவது பெரிய முதலீட்டாளராக உள்ளார்.
தற்போது அவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்தும் முழுமையாக வெளியேறியுள்ளார்.
கிளவுட் சேவை நிறுவனங்கள், சப்ளையர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்களில் முதலீடு செய்து ஹுவாங் உருவாக்கிய பிரம்மாண்ட ஏ.ஐ கட்டமைப்பின் எதிர்காலம் குறித்துத் தொழில்நுட்ப உலகில் கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஹுவாங், சீனச் சந்தையுடனான சிப் வர்த்தகத்தை தொடர வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
அவரது வெளியேற்றம் அமெரிக்காவின் சிப் ஏற்றுமதி கொள்கைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.