Loading...
அமெரிக்காவில் H-1B விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துகிறது IBM
H-1B விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது IBM

அமெரிக்காவில் H-1B விசா & கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்துகிறது IBM

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
07:34 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு சட்டப்பூர்வக் குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்கள் மீதான கெடுபிடிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஐ.பி.எம் தனது அமெரிக்க ஆலோசனைப் பிரிவில் பெரும்பாலான பணியிடங்களுக்கு H-1B விசா மற்றும் கிரீன் கார்டு ஸ்பான்சர்ஷிப் வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவால், IBM நிறுவனத்தை மட்டுமே நம்பியிருந்த நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மற்றும் குறிப்பாக இந்தியத் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

ஊழியர்களுக்குக் கெடு

"அமெரிக்காவை விட்டு வெளியேறுங்கள்"

பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இரு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள பிற நாடுகளின் ஐ.பி.எம் அலுவலகங்களில் இருந்து பணிபுரிவது அல்லது நடப்பு ஆண்டின் இறுதிக்குள் (டிசம்பர் 31) நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது.

இதுகுறித்து ஐ.பி.எம் செய்தி தொடர்பாளர் நியூஸ்வீக் இதழிடம் தெரிவிக்கையில்,"சந்தையின் தேவைகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள திறமையான பணியாளர்களின் இருப்பை கருத்தில் கொண்டு, ஐ.பி.எம் கன்சல்டிங் பிரிவில் பெரும்பாலான பணியிடங்களுக்கு H-1B விசா மற்றும் PERM (கிரீன் கார்டுக்கான முதற்கட்ட சான்றிதழ்) முறையை நிறுத்து முடிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

கெடுபிடிகள்

டிரம்ப் நிர்வாகத்தின் தீவிரக் கெடுபிடிகள்

அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்காக H-1B விசாவை பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள சூழலில், டிரம்ப் நிர்வாகம் இதற்கான சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மோசடிப் புகார்கள் காரணமாக மைக்ரோசாஃப்ட் உட்பட பல முக்கியத் தொழில் நுட்ப நிறுவனங்கள் PERM முறையில் இருந்து இடைநீக்கம் செய்யப்படலாம் என அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் அக்டோபர் மாதம் எச்சரித்திருந்தார்.

ஓபன் ஏ.ஐ மற்றும் இன்ஸ்டாகார்ட் ஆகிய நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் அமெரிக்க நீதித்துறையுடன் சமரசம் செய்துகொண்டன.

ADVERTISEMENT

H-1B மனுக்கள்

2026 நிதியாண்டில் 1,100-க்கும் மேற்பட்ட H-1B மனுக்கள்

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் 30-டன் முடிந்த 2026 நிதியாண்டில் ஐ.பி.எம் நிறுவனம் 1,100-க்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு விண்ணப்பித்திருந்தது.

அமேசான் நிறுவனம் இதே காலத்தில் 13,715-க்கும் மேற்பட்ட விசாக்களுக்கும், ஆப்பிள், மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை ஐ.பி.எம்-ஐ விட 4 மடங்கு அதிகமாகவும் விண்ணப்பித்திருந்தன.

பிற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஐ.பி.எம்-இன் விசா எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அந்நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவு அமெரிக்காவில் பணிபுரியும் சர்வதேசத் தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ADVERTISEMENT