NIA குற்றப்பத்திரிகைக்கு முன்பே அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் எழுதிய மேத்யூ வான்டைக்
செய்தி முன்னோட்டம்
மியான்மர் எல்லை வழியாக ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் போர் உத்திகள் தொடர்பாகப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டில் தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட அமெரிக்கப் பிரஜையான மேத்யூ வான்டைக், திகார் சிறையில் தாம் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகவும், சிறை நிர்வாகம் அதனை மறைக்க முயன்றதாகவும் அமெரிக்கத் தூதரகத்திற்கு வாக்குமூலக் கடிதம் அனுப்பிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. NIA குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஆகஸ்ட் மாதக் கடைசியில் அவர் இந்தத் தகவலை அமெரிக்கத் தூதரகத்திற்கும் தனது குடும்பத்தினருக்கும் SOS தகவலாக அனுப்பியுள்ளார்.
வான்டைக்கின் மிரட்டல்
கொடூர தாக்குதல் குற்றச்சாட்டு
சுமார் ஆறு மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தன் மீது தொடர்ச்சியான வாய்மொழி மிரட்டல்களும், நெஞ்சு மற்றும் கைகளில் கண்மூடித்தனமான குத்துக்களும் நடத்தப்பட்டதாக வான்டைக் குற்றம்சாட்டியுள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு காயம் அடைந்த தமக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்படாமல் சுமார் 24 மணி நேரம் மறுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் பேசும்போது ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், செப்டம்பர் 8-ஆம் தேதி என்ஐஏ தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையின் உள்ளடக்கத்தால் தாம் கோபமடைந்தால், சிறையில் நிகழ்ந்த சித்திரவதைகள் குறித்து ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் வாயிலாக பகிரங்கப்படுத்துவேன் என்றும் வான்டைக் எச்சரித்திருந்தார்.
குற்றப்பத்திரிகை
நீதிமன்ற விசாரணை
கடந்த மார்ச் மாதம் கொல்கத்தா விமான நிலையத்தில் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வான்டைக் மற்றும் 6 உக்ரைன் பிரஜைகள் மீது, செப்டம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட என்ஐஏ குற்றப்பத்திரிகையில் பயங்கரவாத தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.
மாறாக, குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் எளிமையான பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவர்கள் அனைவரும் ஜாமீன் பெற்று சொந்த நாடுகளுக்குத் திரும்பினர்.
தற்போது அமெரிக்காவில் உள்ள வான்டைக், அடுத்த ஆண்டு பிப்ரவரி 24 வரை வெளிநாட்டில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறை அனுபவங்கள் மற்றும் மியான்மர் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வாரந்தோறும் புதிய தகவல்களைத் தொடர்ச்சியாக வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.