முதல் குழந்தையை இழந்த துயரம்: சுயசரிதையில் சோனியா காந்தி உருக்கமான பதிவு
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இன்று வெளியான தனது சுயசரிதை நூலான 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற புத்தகத்தில், 1969-ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த தனது முதல் ஆண் குழந்தை உயிரிழந்தது குறித்தும், அப்போது எதிர்கொண்ட தீராத மனவேதனைகள் குறித்தும் மிகவும் உருக்கமாக பகிர்ந்துள்ளார். திருமணம் முடிந்து முதல் குழந்தைக்காக அவரும் ராஜீவ் காந்தியும் ஆவலுடன் காத்திருந்த வேளையில், மாமியார் இந்திரா காந்தி மிகுந்த உற்சாகத்துடன் அன்பைப் பொழிந்து கர்ப்ப கால ஆலோசனைகளை வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
துயரம்
பிறந்த சில மணி நேரங்களில் நேர்ந்த பெருந்துயரம்
கர்ப்பத்தின் ஏழாவது மாதத் தொடக்கத்தில் திடீரென ஏற்பட்ட தீவிர வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாவுக்கு, 1969 ஜனவரி 18 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் அதே நாள் அதிகாலை 6:30 மணியளவில் குழந்தை உயிரிழந்த செய்தி கேட்டு சோனியாவும் ராஜீவ் காந்தியும் கதறி அழுதுள்ளனர்.
தகவல் அறிந்து தேர்தல் சுற்றுப்பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு இரவு மருத்துவமனைக்கு விரைந்து வந்த இந்திரா காந்தி, கண்ணீர் மல்க இருவரையும் கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.
சஞ்சய் காந்தியும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து பச்சைப்பயறு செடியை கொத்தாகக் கொண்டு வந்து சோனியாவுக்கு காட்டி புன்னகைக்க வைக்கும் அளவுக்கு தனது பாசமான முகத்தை வெளிப்படுத்தியதாக சோனியா குறிப்பிட்டுள்ளார்.
அடக்கம்
மெஹ்ராலி பண்ணைத் தோட்டத்தில் அடக்கம்
இறந்த பச்சிளம் குழந்தைகளைத் தகனம் செய்யாமல் ஆற்றில் விடும் இந்து மத பாரம்பரிய வழக்கத்தையும், கல்லறைத் தோட்டங்களில் அடக்கம் செய்வதில் இருந்த சிக்கல்களையும் ராஜீவ் விளக்கிய போது, சோனியா அதனைத் திட்டவட்டமாக மறுத்தார்.
டெல்லியின் ஓக்லா பகுதியில் ஆற்றில் மிதந்த அழுகிய சடலத்தை நாய்கள் கடித்த காட்சியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் இருந்த அவர், "எந்தக் காரணத்தைக் கொண்டும் நமது குழந்தையை ஆற்றில் எறிய சம்மதிக்க மாட்டேன்" எனக் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து, ராஜீவ் காந்தியும், சஞ்சய் காந்தியும் இணைந்து தங்களது தந்தையான பெரோஸ் காந்திக்கு சொந்தமான மெஹ்ராலி பண்ணை தோட்டத்திற்கு உடலை எடுத்துச் சென்று, அங்கு பூத்துக் குலுங்கிய இளஞ்சிவப்பு நிற போகன்வில்லா செடியின் அடியில் அடக்கம் செய்தனர்.
மீட்சி
அவதூறுச் செய்தியின் ரணமும் ராகுல் காந்தியின் பிறப்பும்
குழந்தையை இழந்த கடுமையான மன உளைச்சலில் இருந்த சமயத்தில், வலதுசாரி நாளிதழ் ஒன்று வெளியிட்ட கொடூரமான தலைப்புச் செய்தி தம்மை மேலும் நிலைகுலைய வைத்ததாகவும், ராஜீவ் காந்தி தமக்கு ஆறுதல் கூறித் தேற்றியதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
பின்னர் அமிதாப் பச்சனின் தாயாரான தேஜி பச்சன் அன்பளிப்பாக வழங்கிய நாய் குட்டியை பராமரித்துத் துயரிலிருந்து மீண்ட சோனியா, அதே ஆண்டின் அக்டோபரில் மீண்டும் கருவுற்றார்.
எட்டு மாதங்கள் தொடர் படுக்கை ஓய்வுக்குப் பின்னர், 1970 ஜூன் 19 அன்று தனது இரண்டாவது மகனான ராகுல் காந்தியை பெற்றெடுத்த தருணத்தையும் அந்த நூலில் சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.