Loading...
ஓசெம்பிக், வேகொவி மருந்துகளால் பார்வையிழப்பு ஆபத்து? அமெரிக்க FDA எச்சரிக்கை
GLP-1 மருந்துகளால் நிரந்தர கண்பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக FDA எச்சரித்துள்ளது

ஓசெம்பிக், வேகொவி மருந்துகளால் பார்வையிழப்பு ஆபத்து? அமெரிக்க FDA எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 10, 2026
06:30 pm

செய்தி முன்னோட்டம்

உடல் எடையை குறைப்பதற்கும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கும் உலக அளவில் புகழ்பெற்ற ஓசெம்பிக் மற்றும் வேகொவி போன்ற 'GLP-1' வகை மருந்துகளால் நிரந்தர கண்பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக FDA எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து 'GLP-1' ரக மருந்துகளின் எச்சரிக்கை அட்டைகளிலும் கண்பார்வை பாதிப்பு குறித்த விவரத்தை சேர்க்க FDA உத்தரவிட்டுள்ளது. இந்த மருந்துகளால் NAION என்ற அரிதான ஆனால் தீவிரமான கண் நரம்பு பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. விழித்திரை நரம்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் இந்த பாதிப்பு, கடுமையான கண்பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும். மங்கலான பார்வை, பார்வையில் கருப்புப் புள்ளிகள், வண்ணங்களை அடையாளம் காண்பதில் தடுமாற்றம் போன்ற பார்வை தொடர்பான கோளாறுகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

ஆய்வறிக்கை

ஆபத்தின் அளவு மற்றும் ஆய்வறிக்கை

கடந்த 2024-ஆம் ஆண்டு செமாக்ளுடைடு மூலப்பொருளைப் பயன்படுத்தும் நோயாளிகளிடம் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது தொடர்பான மருத்துவக் கட்டுரையைத் தொடர்ந்து FDA தனது விரிவான விசாரணையைத் தொடங்கியது.

125-க்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகளை ஆய்வு செய்ததில், குறைந்தது ஒரு வருடத்திற்கு மேலாக 'GLP-1' மருந்துகளை உட்கொள்ளும் 1,00,000 நோயாளிகளில் சுமார் 6 பேருக்கு இந்த NAION பாதிப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

பிற சர்க்கரை நோய் மருந்துகள் அல்லது போலியான மருந்துகளை உட்கொள்பவர்களிடம் இந்த விகிதம் 1,00,000 பேருக்கு 4-க்கும் குறைவாகவே உள்ளது.

இத்தகைய மருந்துகளைப் பயன்படுத்தி வரும் நோயாளிகள் பார்வை மங்குதல் அல்லது கண் தொடர்பான எந்தவொரு கோளாறுகளை உணர்ந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அமெரிக்க FDA அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT