2024ம் ஆண்டு முதல் இந்தியாவில் வாகன விற்பனையைத் தொடங்கும் டெஸ்லா?
அமெரிக்க எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. விரைவிலேயே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டே இந்தியாவில் தங்களது எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்து டெஸ்லா விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் தங்களது தொழிற்சாலையை நிறுவவும் டெஸ்லா திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. டெஸ்லாவின் இந்திய வரவு குறித்த அறிவிப்பானது, வரும் ஜனவரியில் குஜராத்தில் நடைபெறவிருக்கும் வைபிரண்ட் குஜராத் குளோபல் சம்மிட் நிகழ்வில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டெஸ்லாவின் முதலீடு:
தற்போது வரை அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் மட்டுமே தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளைக் கொண்டிருக்கிறது டெஸ்லா. இந்நிலையில், இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநிலத்தில் முதற்கட்டமாக 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் புதிய தொழிற்சாலை ஒன்றை டெஸ்லா கட்டமைக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும், தங்களது தயாரிப்பிற்குத் தேவையான ஆட்டோமொபைல் பாகங்களை உள்நாட்டுத் தயாரிப்பாளர்களிடமே 15 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வாங்கவும் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படவிருக்கும் டெஸ்லா கார்களின் விலையைக் குறைக்க சில பேட்டரிக்களையும் இந்தியாவிலேயே அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் திட்டத்தையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
என்ன விலையில் டெஸ்லா வாகனங்கள் வெளியாகும்?
மேற்கூறியவை அனைத்தும் முதற்கட்டத் திட்டங்கள் மட்டுமே. அவற்றில் வரும் நாட்களில் மாற்றங்கள் செய்யப்பட நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவில் புதிய தொழிற்சாலையைக் கட்டமைக்கத் திட்டமிடும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, ஐந்து ஆண்டுகள் வரை இறக்குமதி வரியைக் குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது டெஸ்லாவிற்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்தியாவில் பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் பயன்பாடும் மிகக் குறைந்த அளவே இருக்கிறது. கடந்தாண்டு விற்பனையான பயணிகள் வாகனங்களில் வெறும் 1.3% மட்டுமே பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் கார்களை இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் விலைக்குள்ளாகவே டெஸ்லா விற்பனைக்கு கொண்டு வரும் சாத்தியங்கள் அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.