ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?
ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர். இதை தீவிரவாத தாக்குதலான குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிகாரிகள், இதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளனர். இவ்விரு நாடுகளும் அதை மறுத்துள்ள நிலையில், தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரால், அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
காசிம் சுலைமானி யார்?
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஒருமுறை சுலைமானியை, 'புரட்சியின் வாழும் தியாகி' என புகழ்ந்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவின் கண்களுக்கு அவர் பயங்கரவாதியாக தென்பட்டார். அந்நாட்டின் புரட்சிகர காவலர்களின் குத்ஸ் படையின் தலைவராக சுலைமானி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். சுலைமானி ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவ தளபதியாக அறியப்பட்டார். நாட்டின் உச்சபட்ச தலைவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவராக கருதப்பட்ட இவர், அந்த பிராந்தியம் முழுவதும் பல்வேறு மறைமுக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அதிகாரத்தை அடைந்தது
தென்கிழக்கு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் பிறந்த சுலைமானி, தான் 13 வயதாக இருக்கும் போது குடும்பத்திற்காக வேலைக்கு செல்ல தொடங்கி விட்டார். 1979 ஆம் ஆண்டு நடந்த ஈரான் புரட்சி இவரை ராணுவம் நோக்கி திருப்பியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு ராணுவ பதவிகளுக்கு படிப்படியாக உயர்ந்தார். தொடக்கத்தில் திரை மறைவில் பணியாற்றி வந்த சுலைமானி, லெபனானில் ஹெஸ்பொல்லாவுடன் ஈரானின் உறவுகளை வலுப்படுத்தினார். சிரியாவின் அல்-அசாத்தை ஆதரித்தார், ஈராக்கில் ஷியா போராளி குழுக்களுடன் உறவுகளை வளர்த்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில், ஈரான் தலைமையில் 'எக்ஸ் ஆப் ரெஸிஸ்டன்ஸ்' அமைப்பு உருவாக முக்கிய காரணமானார்.
இராணுவ வாழ்க்கை மற்றும் பிராந்திய செல்வாக்கு
ஈரான்-ஈராக் போரில் சுலைமானியின் ராணுவ செல்வாக்கு வெளிப்பட்ட நிலையில், அவரின் எல்லை தாண்டிய மிஷின்களுக்காக நாட்டில் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்தார். குத்ஸ் படைகளுக்கு 1998ம் ஆண்டு தலைமை ஏற்ற இவர், உளவுத்துறை, நிதி மற்றும் அரசியலில் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் தன் செல்வாக்கை உயர்த்தினார். சுலைமானி தலைமையேற்று நடத்திய பல்வேறு தாக்குதல்களில், அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் வீரர்கள் கொல்லப்பட்டதாக, அந்நாடு குற்றம் சாட்டுகிறது.
ரகசிய நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள்
சுலைமானிக்கு கீழ் குத்ஸ் படைகள் சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் ஆதரவாகவும் மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராகவும் முக்கிய பங்காற்றின. இருப்பினும் 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கான சவுதி அரேபியாவின் தூதரை கொலை செய்யும் முயற்சியில், குத்ஸ் படைகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டுகளைப் குத்ஸ் மறுத்துள்ளது. மத்திய கிழக்கில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததற்காக, அமெரிக்கா குத்ஸ் படைகளையும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.
இறப்பு
சுலைமானி தன் வாழ்நாள் முழுவதும் மேற்கத்திய மற்றும் அரபு நாடுகளின் பல்வேறு, படுகொலை நடவடிக்கைகளில் இருந்து தப்பியுள்ளார். 2006 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் விமான விபத்தில் இவர் இறந்து விட்டதாக வதந்திகளும் வளம் வந்தது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கா, பாக்தாத் விமான நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.இந்த தாக்குதலில் ஈராக்கின் சக்திவாய்ந்த ஹஷெட் அல்-ஷாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.