காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா
இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்ததற்கு பின்னர், பாலஸ்தீனியத்தை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிக்கும் என தாங்கள் நம்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "இஸ்ரேலியப் படைகள் காசாவை மீண்டும் ஆக்கிரமிப்பது நல்லதல்ல என அதிபர் ஜோ பைடன் இன்னும் நம்புகிறார். இது இஸ்ரேலுக்கு நல்லதல்ல; இஸ்ரேலிய மக்களுக்கு நல்லதல்ல" என அவர் தெரிவித்தார். "அப்பிராந்தியத்தில் வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் முக்கியமான ஒன்று, போருக்கு பின் காசா எவ்வாறு இருக்கும் என்பதுதான்" "ஏனென்றால் அது அக்டோபர் 6 ஆம் தேதிக்கு முந்தைய நிலையாக இருக்க முடியாது. அது ஹமாஸ் ஆக இருக்க முடியாது" என கூறினார்.
இஸ்ரேல் பிரதமரின் கருத்திற்கு அமெரிக்கா எதிர்வினை
இஸ்ரேல் பாலஸ்தீனிய போர் முடிவடைந்த பின்னர், காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு, காலவரையற்ற காலத்திற்கு இஸ்ரேலுக்கு பொறுப்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இஸ்ரேல் பிரதமரின் இந்த கருத்துக்கள் போர் தொடங்கியதற்கு பின், காசா பகுதியின் எதிர்காலம் குறித்து அவர் தெரிவித்த முதல் கருத்தாகும். இது அமெரிக்க அதிபரின் கருத்திற்கு நேர் எதிராக உள்ளதால், அமெரிக்கா இந்த விவகாரத்தில் இஸ்ரேலை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் இடைநிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இஸ்ரேல்
மேலும் சமீபத்திய நாட்களில் போர் தொடர்பான கருத்துக்களில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை. போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும், காசா பகுதிக்குள் நிவாரண உதவிகளை அனுப்ப போரில் இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என அமெரிக்க அதிபர் வலியுறுத்தி வருகிறார். இதை சிறிதும் பொருட்படுத்தாத இஸ்ரேல், ஆண்டனி பிளிங்கனின் இஸ்ரேல் பயணத்தின் போதே, மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதியில் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சாமானிய மக்கள் பலர் கொல்லப்பட்ட நிலையில், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்ததாக இஸ்ரேல் காரணம் சொன்னது குறிப்பிடத்தக்கது.