அமெரிக்க வங்கிகள் மற்றும் விமானப் போக்குவரத்தை முடக்கிய தொடர் தொழில்நுட்பத் தடைகள்: சைபர் இயக்குநரை உடனடியாக மாற்றிய டிரம்ப்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நிதி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் தொடர் சேவைத் தடைகள் மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு மத்தியில், தேசிய சைபர் இயக்குநரகத்தின் தற்காலிகத் தலைவராக கிர்ஸ்டன் ஏ. டேவிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சைபர் பாதுகாப்புத் தலைமையில் மேற்கொண்டுள்ள இந்த முக்கிய மாற்றத்தின் மூலம், 2025 ஆகஸ்ட் முதல் இப்பொறுப்பில் இருந்த ஷான் கெய்ர்ன்கிராஸ் பதவியிலிருந்து விலகியுள்ளார். நிரந்தரப் பதவிக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதல் தேவை என்பதால், கிர்ஸ்டன் டேவிஸ் தற்காலிகப் பொறுப்பில் செயல்படுவார்.
கிர்ஸ்டன் டேவிஸ்
அதிபர் டிரம்ப் தலைமையில் புதிய சைபர் இலக்கு
புதிய நியமனம் குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள கிர்ஸ்டன் டேவிஸ், "அனலாக், டிஜிட்டல் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பங்களின் முக்கியச் சந்திப்பில் நமது நாடு நிற்கிறது. அடிப்படை கட்டமைப்புகளை நவீனமயமாக்கி, எதிர்கால சைபர் திறமைகளை உருவாக்குவதன் மூலம் வரும் தலைமுறைகளுக்கு சைபர் உலகில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது. அதிபர் டிரம்ப் தலைமையில் மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்ப எதிர்காலத்தை உருவாக்குவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோவும், கிர்ஸ்டன் டேவிஸுக்கு வாழ்த்து தெரிவித்து, அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சைபர் நெருக்கடிகள்
தலைமை மாற்றத்திற்கு பின்னால் உள்ள தொடர் சைபர் நெருக்கடிகள்
அமெரிக்காவின் முக்கியத் துறைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் சைபர் தாக்குதல்கள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜேபி மோர்கன் சேஸ் வங்கிக்கு சேவை வழங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில், சுமார் 16,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன.
விசா மற்றும் மாஸ்டர்கார்டு கூட்டாளி நிறுவனங்களின் வாடிக்கையாளர் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களும் கசிந்துள்ளன.
சமீப வாரங்களில் ஜேபி மோர்கன் உள்ளிட்ட வங்கிகளில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு, அமெரிக்கா முழுவதும் விமான போக்குவரத்தை முடக்கிய தொழில்நுட்பத் தடை, மைக்ரோசாப்ட் மின்னஞ்சல் சேவைத் தடை மற்றும் பைனான்ஸ் மீதான சைபர் தாக்குதல் ஆகியவை அமெரிக்காவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
விவரங்கள்
யார் இந்த கிர்ஸ்டன் டேவிஸ்?
அரசு மற்றும் தனியார் துறைகளில் சுமார் 20 ஆண்டுகால சைபர் பாதுகாப்பு அனுபவம் கொண்டவர் கிர்ஸ்டன் டேவிஸ்.
2025 டிசம்பர் 23 முதல் அமெரிக்கப் போர் துறையின் தலைமைத் தகவல் அதிகாரியாக பணியாற்றி, சைபர் பாதுகாப்பு மற்றும் உத்திசார் தடுப்பு அமைப்புகளுக்குப் பொறுப்பு வகித்தார்.
யூனிலீவர் நிறுவனத்தின் தலைமைத் தகவல் பாதுகாப்பு அதிகாரியாகவும், எஸ்டீ லாடர், பார்க்லேஸ்-ஆப்பிரிக்கா, ஹெச்பி மற்றும் சீமென்ஸ் ஆகிய நிறுவனங்களில் உயர்பதவிகளையும் வகித்துள்ளார்.
டிஜிட்டல் உலகில் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக 'Institute for Cyber' என்ற இலாப நோக்கற்ற அமைப்பை நிறுவியுள்ளார்.
பியூஜெட் சவுண்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் இளங்கலைப் பட்டமும், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமைகள் நிறுவனத்தில் உயர்கல்வியும் பயின்றுள்ளார்.