ஈரான் விமானங்களுக்கு சர்வதேச தடை: அமெரிக்காவின் கெடுவால் உலகம் முழுவதும் இயக்கம் முடங்கும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
ஈரானின் அனைத்து விமான நிறுவனங்களின் சேவைகளையும் உலகம் முழுவதும் புதன்கிழமை (செப்டம்பர் 23) முதல் முழுமையாக முடக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெஸன்ட், CNBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இத்தடை விமான நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, அவற்றுக்குச் சேவை வழங்கும் சர்வதேச விமான நிலையங்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள், பயணச்சீட்டு விற்பனை முகமைகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானிய விமானங்களுக்குத் தரையிறங்கும் வசதி, எரிபொருள் அல்லது பயணச்சீட்டு விற்பனை உள்ளிட்ட சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அமெரிக்க டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு இரண்டாம் நிலைத் தடைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.
பின்னணி
பொருளாதாரத் தடைகளின் பின்னணி
ஈரானை சர்வதேச நிதி மற்றும் வர்த்தக அமைப்பிலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா இத்தகைய தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.
செப்டம்பர் தொடக்கத்தில் ஈரானின் எஞ்சிய 27 வர்த்தக விமான நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே தடை விதித்தது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ராணுவத்திற்கு ஆயுதங்கள், வீரர்கள் மற்றும் பணத்தைக் கொண்டு சேர்க்கப் பொதுத்துறை மற்றும் தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஈராக்கில் ஈரானிய விமானங்களின் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஜார்ஜியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் ஈரானிய விமான நிறுவனங்களுக்கான சேவைகளைக் கட்டுப்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தை
சீனாவுடனான பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்பிற்கு முன்னோடியாக, சீனத் துணைப் பிரதமர் ஹே லிஃபெங் மற்றும் சீன மத்திய வங்கி ஆளுநருடன் ஸ்காட் பெஸன்ட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஈரானின் முதன்மை பொருளாதாரப் பங்காளியான சீனா, அமெரிக்காவின் இக்கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டுச் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல ஆண்டுகளாக உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்பு சேவைகள் கிடைக்காமல் தவித்து வரும் ஈரானின் சிவில் விமான போக்குவரத்துத் துறைக்கு அமெரிக்காவின் இக்கட்டுப்பாடு பேரடியாக அமைந்துள்ளது.