ஈரான் மிரட்டல் எதிரொலி: அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் ராணுவத் தளத்திற்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
ஈரான் தரப்பிலிருந்து தொடர் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பான ராணுவத் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மற்றும் முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஈரான் தொடுத்து வரும் மிரட்டல்கள் தற்போது மிகவும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட் பெசென்ட்
ஈரானின் பிரதான இலக்கான ஸ்காட் பெசென்ட்
ஈரானை நிதி ரீதியாக தனிமைப்படுத்தவும், அதன் வர்த்தக பாதைகளை முடக்கவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தப் பிரச்சாரங்களின் முன்னணியில் ஸ்காட் பெசென்ட் செயல்பட்டு வருகிறார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகை மூலம் ஈரானின் வர்த்தகங்கள் முழுமையாக முடக்கப்படும் என்றும், வர்த்தகம் செய்வதற்கு அந்த நாட்டிற்கு மிச்சம் ஒன்றுமில்லை என்றும் கடந்த செப்டம்பரில் பெசென்ட் எச்சரித்திருந்தார்.
இதன் காரணமாகவே அவர் ஈரானின் நேரடி மிரட்டலுக்கு ஆளாகியுள்ளதாக 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
பெசென்ட் மீதான அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அமெரிக்க மண்ணிலோ அல்லது வெளிநாடுகளிலோ பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தும் ஈரானின் தற்போதைய ராணுவத் திறன் மிகவும் வரம்பிற்குட்பட்டதே என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
இருப்பினும், தனி நபர்களை இலக்காகக் கொண்ட அச்சுறுத்தல்களை அதிகாரிகள் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதோடு, ஈரானின் தாக்குதல் திட்டங்கள் குறித்த உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
மேலும், பிரிட்டனில் உள்ள தளத்தில் இருந்து அமெரிக்க ராணுவ விமானங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா அமைதியை விரும்பினாலும், தேவைப்பட்டால் கடுமையான பதிலடி கொடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.