ஈரான் உடனான ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், ஈரானில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் பயனுள்ள வகையில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் நடத்திய மூடிய கதவுகளுக்கு பின்னாலான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
டிரம்ப்
"ஈரானில் 301% பணவீக்கம்"
அமெரிக்கா கடந்த ஜூலை 2026 முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள், கடற்படை முற்றுகை மற்றும் குறிப்பிட்ட இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வந்தது.
தற்போதைய சூழல் குறித்து பேசிய அதிபர் டிரம்ப்,"ராணுவ ரீதியாக ஈரான் உடனான போர் முடிவுக்கு வந்துவிட்டது. இனி பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை; தற்போதைய நிலையே தொடரும். ஈரான் தற்போது 301% பணவீக்கம் மற்றும் பல்வேறு உள்நாட்டுப் பிரச்சினைகளால் சீரழிந்து வரும் நாடாக மாறியுள்ளது. இருப்பினும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு அவசர மாற்றங்களுக்கும் அமெரிக்கப் படைகள் எப்போதும் தயாராகவே உள்ளன."
அமைதிப் பேச்சுவார்த்தை
அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தாரின் தூதரகப் பங்கு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் மோதலைத் தணித்து, பேச்சுவார்த்தை நடத்துவதில் கத்தார் முதன்மை தூதராக பங்காற்றி வருகிறது.
கடந்த வாரம், தெஹ்ரான் முன்வைத்த 7 நிபந்தனைகளுக்கு வாஷிங்டன் ஒப்புக்கொண்டால் அமைதி ஒப்பந்தத்திற்கு தயார் என்ற அணுசக்தி முன்மொழிவை கத்தார் வழியாக அமெரிக்காவிற்கு ஈரான் அனுப்பியிருந்தது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை விரும்பும் நட்பு நாடுகள் அமைதித் தீர்வை வலியுறுத்தி வருவதாக டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
ஈரான்
"அமெரிக்கா போலிச் செய்திகளைப் பரப்புகிறது"
டிரம்பின் இந்த அறிவிப்பிற்கு ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) செயலாளரான மொஹ்சன் ரெஸாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள மொஹ்சன் ரெஸாய்,"ஈரான் மீதான போர் ஏற்கனவே அமெரிக்க அரசைப் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டது. ஆனால் வாஷிங்டன் ஒரு விரக்தியடைந்த சூதாட்டக்காரனைப் போலத் தவிக்கிறது".
"கற்பனையான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்துப் போலிச் செய்திகளைப் (Fake News) பரப்புவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈரான் முன்வைத்துள்ள 7 கோரிக்கைகளுக்கு அமெரிக்கா உடனடியாகச் சரணடைய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்
கத்தாரின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் வார்த்தைப் போர் மத்திய கிழக்கு அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.