
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இணைய அமெரிக்கா திட்டம்?
செய்தி முன்னோட்டம்
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் இணைவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் டிரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்திப்பை நடத்தியுள்ளார்.
அப்போது, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல் தொடர்பான முக்கிய முடிவுகளை அவர் மதிப்பாய்வு செய்தார் என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில் உடன் இணைவது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருவதாக ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சில சிபிஎஸ் நியூஸ்க்கு தெரிவித்தனர்.
எச்சரிக்கைகள்
சமூக வலைத்தளத்தில் அமெரிக்கா அதிபர் விடுத்த எச்சரிக்கை
ஈரானின் நிலத்தடி செறிவூட்டல் வசதியை குறிவைத்து குண்டுவீசுவதற்காக, அமெரிக்கா அதிபர் டிரம்ப் வரும் நாட்களில் போரில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக Axios தெரிவித்துள்ளது.
ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து அதிபர் டிரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த டிரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.
ஈரானின் "நிபந்தனையற்ற சரணடைதல்" குறித்த அவரது சமீபத்திய ட்வீட், அமெரிக்காவின் சாத்தியமான நடவடிக்கையைச் சுற்றியுள்ள விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கட்டுப்பாடு
ஈரானின் வான்வெளியை கட்டுப்பாட்டில் எடுத்த அமெரிக்கா
டிரம்ப் மற்றொரு அறிக்கையில் ஈரானின் தலைவர் காமெனி தற்போது எங்கு இருக்கிறார் என்பது அமெரிக்க உளவுத்துறைக்குத் தெரியும் என்று கூறினார்.
"'உச்ச தலைவர்' என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் - நாங்கள் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை (கொல்லப் போவதில்லை), குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகப் பதிவுகளில், டிரம்ப், ஈரானிய வான்வெளியின் முழு கட்டுப்பாட்டையும் அமெரிக்கா கொண்டுள்ளது என்று அறிவித்தார். மேம்பட்ட கண்காணிப்பு உபகரணங்கள் உட்பட ஈரானின் பாதுகாப்பு அமைப்புகள் எதுவும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இராணுவ தொழில்நுட்பத்திற்கு இணையானவை அல்ல என்று கூறினார்.