இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள்
காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து தற்போது நடந்து வரும் இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் எனவும், பின்னர், இஸ்ரேல் குறிப்பிட்ட ஹமாஸ் போராளிகளை குறிவைக்கும் குறைந்த தீவிரத் தன்மை கொண்ட தாக்குதல்களை கையில் எடுக்கலாமென, அமெரிக்க அதிகாரிகள் சிஎன்என் இடம் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுக்குப் பின், இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் மூண்டது. கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பின்னர்,போர் நிறுத்த நீட்டிப்பு ஒப்பந்தம் தோல்வியடைந்ததால், போர் மீண்டும் தொடங்கியது. முன்னர் வடக்கு காசா பகுதியில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது கான் யூனீஸ் உள்ளிட்ட, காசாவின் தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை தீவிர படுத்தியுள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து, இஸ்ரேல எச்சரித்த அமெரிக்கா
தெற்கு காசாவில் தரைவழித் தாக்குதல் புதிய அத்தியாயத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்து வரக்கூடிய வாரங்களில் இஸ்ரேலின் தாக்குதல் வெள்ளை மாளிகைக்கு கவலைகளை ஏற்படுத்தியதாக மூத்த அதிகாரி அமெரிக்க தெரிவித்தார். மேலும் அந்த அதிகாரி, வெள்ளை மாளிகை இஸ்ரேலிடம் "கடுமையான" மற்றும் "நேரடி" உரையாடல்களை நிகழ்த்தியதாகவும், வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்ததை தெற்கு பகுதியில் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார். காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தற்போது வரை 16,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், சில ஆயிரம் ஹமாஸ் போராளிகளை கொன்றுள்ளதாக கூறுகிறது.
இஸ்ரேலால் அதிக தீவிரம் கொண்ட ராணுவ நடவடிக்கைகளை காலவரையற்ற மேற்கொள்ள முடியாது
இஸ்ரேல் காசா பகுதியில் அதிக தீவிரம் கொண்ட ராணுவ நடவடிக்கைகளை காலவரையற்ற மேற்கொள்ள முடியாது என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கு காரணமாக, இஸ்ரேலால் அணிதிரட்டப்பட்ட ராணுவத்தை பராமரிக்க முடியாது என்றும், இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவின் தினசரி தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் அமெரிக்கா அதிகாரிகள், தாங்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் செய்தது போல, அதிக தீவிரம் கொண்ட தாக்குதல்களை குறைத்துக் கொண்டு, பயங்கரவாத தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் என நம்புவதாக தெரிவித்தனர்.