மணிப்பூர் வன்முறை, நிஜ்ஜார் கொலை ஆகியவற்றை குறிப்பிடும் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை
அமெரிக்கா, அதன் 2023 மனித உரிமைகள் அறிக்கையில், மே 2023இல் நடந்த மணிப்பூர் இனக்கலவரம், அதனைத்தொடர்ந்து மணிப்பூரில் நடந்தேறிய "குறிப்பிடத்தக்க" துஷ்பிரயோகங்களை பற்றி குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையால்வெளியிடப்பட்ட அறிக்கையில், BBC மீது வரி அதிகாரிகள் நடத்திய சோதனைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கனடாவில் சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது போன்ற நாடுகடந்த அடக்குமுறை வழக்குகளும் அதில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை இந்த அறிக்கை குறித்து பதிலளிக்காத நிலையில், அமெரிக்காவின் இத்தகைய அறிக்கைகள் "தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின்" அடிப்படையிலானவை என்று வெளியுறவு அமைச்சகம் முன்னர் கூறியது. கடந்த ஆண்டு, MEA இந்த அறிக்கை குறித்து குறிப்பிடுகையில்,"சில அமெரிக்க அதிகாரிகளின் உந்துதல் மற்றும் பக்கச்சார்பான வர்ணனையின்" அடிப்படையிலானது எனக்கூறியது.
அமெரிக்காவின் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுவது என்ன?
மணிப்பூரைப் பொறுத்தவரை, குறைந்தபட்சம் 175 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. கடந்த மே மாதம் முதல், மணிப்பூர் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் குகி-ஜோ பழங்குடி சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர். "ஆயுத மோதல்கள், கற்பழிப்புகள் மற்றும் தாக்குதல்கள், வீடுகள், வணிகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழிப்பதாக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் புகாரளித்தனர்". "வன்முறைக்குப் பதிலடியாக அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்பியது. தினசரி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மற்றும் இணையத்தை முடக்கியது" என்று அறிக்கை கூறுகிறது. வன்முறையைத் தடுக்கத் தவறியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில், இந்திய அரசாங்கத்தின் பதில், அதன் "கையாலாகாத்தனம்" என விமர்சிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி வரி ஆய்வுகள் பற்றி குறிப்பிட்ட அறிக்கை
பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, நியாயமற்ற கைதுகள் மற்றும் எதிர்ப்பை அடக்குவதற்கு குற்றவியல் அவதூறு சட்டங்களைப் பயன்படுத்துதல் போன்ற "கவலைக்குரிய போக்கை" இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அந்நிறுவனத்தின் நிதி செயல்முறைகளில் சம்மந்தமே இல்லாத பத்திரிகையாளர்களிடமிருந்தும் வரி அதிகாரிகள் உபகரணங்களை கைப்பற்றியதாக அமெரிக்காவின் அறிக்கை கூறியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி வளாகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். "இந்தியா: மோடி கேள்வி" என்ற தலைப்பில் 2002 குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை BBC வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டது.
ஹர்தீப் நிஜ்ஜார் கொலை குறித்தும் விவாதிக்கும் அறிக்கை
ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. கனடாவில் சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதையும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது "அரசு முகவர்களின் சட்டத்திற்கு புறம்பான செயல்களின் வடிவத்தை" சுட்டிக்காட்டுகிறது. சுவாரஸ்யமாக, நிஜ்ஜார் வழக்கு பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டாலும், இந்தியாவுக்கு எதிரான குர்பத்வந்த் சிங் பன்னுனின் 'வாடகைக்காகக் கொலை' வழக்கு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஆண்டு, நியூயார்க்கில் காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல இந்திய உளவுத்துறை அதிகாரி திட்டமிட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.