ஈரான்-பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் உலக நாடுகளின் நிலை என்ன?
ஈரான்-பாகிஸ்தானுக்கு இடையே கடந்த இரு நாட்களாக நடைபெற்ற வான்வெளி தாக்குதல் உலக நாடுகளை சற்றே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதலைத் தவிர, ஈரான், தன்னுடைய அண்டை நாடான ஈராக் மற்றும் சிரியா மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களையும் கட்டவிழ்த்துள்ளது. ஈரான்-பாகிஸ்தான் தாக்குதலில் இருபக்கமும் உயிர் பலி ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஏற்கனவே வன்முறை மற்றும் இரத்தக்களரிகளால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கில், பதற்றம் மற்றும் ஆயுத மோதல்களின் அதிகரிப்பு, மேலும் கவலையை அதிகரித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் செங்கடலில் வணிகக் கப்பல்களின் மீதான தெஹ்ரான் ஆதரவு ஹூதி போராளிகளின் தாக்குதல் போன்றவை மத்திய கிழக்கு நாடுகளை பிளவுபடுத்தியுள்ளது
உலக நாடுகள் கூறுவது என்ன?
பாக்-ஈரானுக்கு இடையேயான வான்வெளி தாக்குதலுக்கு இந்தியா,"தற்காப்புக்காக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளைப் தாங்கள் புரிந்துகொள்வதாக" கூறியது. சீனாவோ, 'பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், கூட்டாக பிராந்தியத்தை அமைதியாக வைத்திருக்கவும் இரு தரப்பையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்' என மத்தியஸ்தம் செய்ய அழைப்பு விடுத்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, 'ஈரான் 48 மணி நேரத்தில் மூன்று நாடுகளின் இறையாண்மை எல்லைகளை மீறியதாக' விமர்சித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும்,"தீவிரவாதிகளின் இலக்குகள் மீது கொடிய வான்வழித் தாக்குதல்களை நிறுத்திவைக்குமாறு இரு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது".