'கடைசி மூச்சு வரை போராடுவோம்': பேச்சுவார்த்தைக்கு ஒத்துவராத டிரம்ப்பிற்கு ஈரானிய அதிபர் பதிலடி
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் முன்வைத்த 7 நாட்கள் கொண்ட அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர்ப்பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் 7 நாள் கெடு முன்மொழிவை நிராகரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க ஒப்பந்தம் செய்ய விரும்புவதற்குக் காரணம், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையால் அவர்கள் பொருளாதார ரீதியாகப் பேரழிவைச் சந்தித்து வருவதுதான். வருமானம் இல்லாததால் அவர்களின் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி உலகிற்குப் பிரச்சினை உருவாக்க நினைத்தார்கள், ஆனால் இராணுவ வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் பெரிய எஃகு சுவரைப் போன்ற முற்றுகையை நாங்கள் அவர்கள் மீது விதித்து விட்டோம்" எனக் கூறினார்.
பதிலடி
"கடைசி மூச்சு வரை பின்வாங்க மாட்டோம்": ஈரான் அதிபர் பதிலடி
அமெரிக்க அதிபர் டிரம்பின் எச்சரிக்கைகளுக்கு ஐ.நா பொது சபை கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், தலைநகர் தஹ்ரானில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் ஆக்ரோஷமாகப் பதிலளித்தார்.
"அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். எங்கள் உடலில் உயிர் இருக்கும் வரை, கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக நின்று போராடுவோம்."
"கடந்த 200 ஆண்டுகளில் ஈரான் எந்தவொரு நாட்டின் மீதும் முதலில் தாக்குதல் நடத்தியதில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலுமே ஈரானிய நிர்வாகம் சில நாட்களில் வீழ்ந்துவிடும் என்ற தவறான கணக்கீட்டில் இந்தப் போரைத் தொடங்கின" எனச் சாடினார்.
ஜலசந்தி முடக்கம்
"ஜலசந்தி முடக்கத்திற்கு ஈரான் பொறுப்பல்ல"
ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்திற்கு ஈரான் பொறுப்பல்ல என்றும், அமெரிக்கா தங்களது வணிகப் பாதைகளை முடக்கியதால் எழுந்த இயல்பான நடவடிக்கையே இது என்றும் குறிப்பிட்ட அவர், அச்சுறுத்தல்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும் என்றார்.
அமெரிக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்குப் பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.