செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ஏமன் நாட்டின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளனர். சில சமயங்களில் வணிக கப்பல்களில் ஹூதி குழுவினர் ஏற முயன்றனர், மற்றும் பெரும்பான்மையான சமயங்களில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் வர்த்தக கப்பல்களை தாக்கினார். நவம்பர் இறுதியில் எண்ணெய் ஒரு கப்பல் அவர்களால் கடத்தப்பட்டது. இவை அனைத்து சம்பவங்களிலும் பாதிப்புகள் குறைவுதான் என்றாலும், மார்ஸ்க், எம்.எஸ்.சி உள்ளிட்ட நிறுவனங்கள் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தினார். தாக்குதல்களில் இருந்து கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க, ஒரு கடல்சார் கூட்டணியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு செங்கடல் ஏன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது?
உலகில் அதிகப்படியான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பகுதிகளில் ஒன்றான செங்கடல், சூயஸ் கால்வாய்க்கு தெற்கில் அமைந்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தை, ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதன் தெற்கு முனையில் ஜிபூட்டிக்கும் யேமனுக்கும் இடையில், சுமார் 20 மைல் அகலமுள்ள ஒரு குறுகிய பாப் எல்-மண்டேப் ஜலசந்தி நீர்நிலை உள்ளது. ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் அதை குறிவைக்கின்றனர். உலகின் 12% வர்த்தகமும், 30% கண்டெய்னர் போக்குவரத்தும் இந்த வழியாக நடைபெறுகிறது. இதன் மூலம், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும்.
ஹூதிகள் யார், அவர்கள் ஏன் இப்போது தாக்குகிறார்கள்?
ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்களான ஹூதிகள், செங்கடல் கடற்கரை உட்பட அந்நாட்டின் மேற்கு பகுதியை கைவசம் வைத்துள்ளனர். ஈரான் ஆதரவு பெற்று இருந்தாலும், இவர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஹமாஸூக்கு எந்த இஸ்லாமிய நாடுகள் மற்றும் அமைப்புகள் ஆதரவளிக்க முன்வராதபோது, அவர்களுக்கு ஆதரவாக அக்டோபர் இறுதியில் ஹூதிகள் போரை அறிவித்தனர். ஆரம்பத்தில் ஹூதிகள் இஸ்ரேல் மீது நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினார்கள், ஆனால் அவை அமெரிக்க மற்றும் சவுதி அரேபியாவால் இடைமறிக்கப்பட்டதால் பலனளிக்கவில்லை. பின்னர் 'கேலக்ஸி லீடர்' என்ற எண்ணெய் கப்பலை கடத்தினர். முதலில், இஸ்ரேல் நாட்டின் கப்பல்களை மட்டும் தகர்ப்பதாக எச்சரிக்கை விடுத்த ஹூதிகள், பின்னர் அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களையும் தாக்கத் தொடங்கினார்.
அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் எவ்வாறு பதிலளித்தன?
கடந்த ஒரு மாதமாக நிலைமை தீவிரமடைந்த நிலையில், மற்ற சரக்குக் கப்பல்களில் ஹூதிகள் ஏறும் முயற்சிகளை அமெரிக்கா முறியடித்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள், ஹூதி ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை செங்கடல் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ள, ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியன் என்ற திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இதில், இங்கிலாந்து, பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, சீஷெல்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ள நிலையில், சவுதி அரேபியா மற்றும் எகிப்து பங்கேற்கவில்லை. ஹூதி தலைமை உறுப்பினரான முகமது அல்-புகைதி அல் ஜசீராவிடம், அமெரிக்காவால் உருவாக்கப்படும் எந்தவொரு கூட்டணியையும், தனது குழு எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார்.
இடையூறுகள் கப்பல் போக்குவரத்தை எவ்வாறு பாதிக்கும்?
மார்ஸ்க், ஹபாக்-லாயிட், எம்.எஸ்.சி ஆகிய மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள், செங்கடல் வழியை பயன்படுத்தமாட்டோம் என கடந்த வாரம் அறிவித்தனர். மேலும், 10 பெரிய கப்பல் நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் இதே முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சில கப்பல்கள் ஆப்பிரிக்காவின் தெற்கு முனையில் உள்ள கேப் ஆஃப் குட் ஹோப்பைச் சுற்றி திருப்பி விடப்படுகின்றன. இது அவற்றின் பயண நேரத்தை இரண்டு வாரங்கள் வரை அதிகரிக்கின்றன. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் பயணம் செய்வதற்கான கப்பல்களின் இன்சூரன்ஸ் ரிஸ்க் பிரீமியமும் அதிகரித்துவருகிறது. கப்பல் நிறுவனங்கள் செலுத்தும் இந்த ரிஸ்க் பிரீமியம், டிசம்பர் தொடக்கத்தில் ஒரு கப்பலின் மதிப்பில் வெறும் 0.07% மட்டுமே இருந்த நிலையில், சமீபத்திய நாட்களில் சுமார் 0.5% உயர்ந்து 0.7 சதவீதமாகியுள்ளது.
நுகர்வோர் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்?
பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் செங்கடல் போக்குவரத்தை நிறுத்தியதாக தெரிவித்ததை தொடர்ந்து, எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை அதிகரித்தது. செங்கடலில் வர்த்தக கப்பல்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில், பல்வேறு கப்பல்கள் நிறுவனங்கள் இப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்த நேரிடும், இதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது கப்பல் நிறுவனங்களை இரண்டு கடினமான முடிவில் விட்டுள்ளது- கப்பலை ஆபத்து மிகுந்த செங்கடல் பகுதியில் இயக்குவது, அதற்கான அதிகப்படியான இன்சூரன்ஸ் தொகையை கட்டுவது அல்லது வேறு பாதையை தேர்ந்தெடுப்பது. இவை இரண்டுமே, அவற்றுக்கு அதிகப்படியான பொருளாதார அழுத்தத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.