உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான "பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ்-இன்" பத்தாவது ஆண்டு விழாவில் பங்கேற்க சீனா சென்றார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதற்கு பிறகு, அதிபர் விளாடிமிர் புடின் மத்திய ஆசியாவிற்கு வெளியில் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் உச்சி மாநாட்டில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு உள்ளிட்ட 130 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டம், சீனாவை உலகுடன் இணைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டம் என்றால் என்ன?
"பெல்ட்" என்பது சீன அரசு மத்திய ஆசிய வழியாக ஐரோப்ப கண்டத்திற்கு தரைவழியாக அமைத்து வரும் சாலையை குறிக்கிறது. இது பண்டைய கால "பட்டு வணிகச்சாலையை" ஒத்து அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. "ரோடு" என்பது சீனாவை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் உள்ள மிக முக்கியமான துறைமுகங்களுடன் இணைப்பதற்கான கடல் வழி பாதையை குறிக்கும். சீன அரசு இதுவரை இத்திட்டத்திற்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜி ஜின்பிங்- புதின் சந்திப்பு
உச்சி மாநாட்டில் பங்கேற்க, நேற்று சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர், இன்று ஜி ஜின்பிங் உடன் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த சந்திப்பில் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என ரஷ்யா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் ரஷ்ய அதிபர் சீனாவுடன் ஏற்கனவே வலுவாக இருக்கும் கூட்டணியை மேலும் வலுவாக்க முயல்வார் என்று சொல்லப்படுகிறது. உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷ்யாவின் போரால், ரஷ்யா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. கடந்தாண்டில் மட்டும் சீன ரஷ்யா இடையே 190 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.