டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியர்கள் மற்றும் சீனர்களுக்கு, அதிகபட்சமாக 30 நாட்கள் மலேசியாவில் தங்கும் வகையில், அந்நாடு இலவச விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மக்கள் நீதிக்கட்சி மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்த அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும், எவ்வளவு நாட்கள் இந்த நடைமுறை தொடரும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும் அவர், இந்த அறிவிப்பு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். மலேசியா பிரதமர் கடந்த மாதம், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் சீனா நாட்டவர்களுக்கு விசா நடைமுறைகள் மேம்படுத்தப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பெருந்தொற்றுக்குப் பிறகு குறைந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை
அரசாங்கத் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை, மலேசியாவிற்கு 9.16 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனர். சீனாவிலிருந்து 498,540 மற்றும் இந்தியாவில் இருந்து 283,885. இது கொரோனா தொற்றுநோய் ஏற்படுவதற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், சீனாவிலிருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 354,486 பேர் மலேசியாவிற்கு சுற்றுலாவுக்காக பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும், அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அண்மையில், வியட்நாம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு, இலவச விசாவை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.